செய்திகள்

பாராளுமன்ற தேர்தலுக்குள் என்னை கொல்ல திட்டம் - நடிகர் பவன்கல்யாண் குற்றச்சாட்டு

Published On 2018-09-28 15:06 IST   |   Update On 2018-09-28 15:06:00 IST
நடிகர் சிரஞ்சீவியின் தம்பியும் நடிகருமான பவன்கல்யாண் ஜனசேனை என்ற கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். இவர் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், தன்னை கொல்ல சதித்திட்டம் நடப்பதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார். #PawanKalyan
நகரி:

ஜனசேனை கட்சி சார்பில் ஆந்திர மாநிலம் ஏழூர் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பவன் கல்யாண் பேசியதாவது:-

2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்குள் என்னை கொல்ல சிலர் சதித்திட்டம் தீட்டியுள்ளனர். இது தொடர்பாக 3 பேர் பேசி இருக்கும் ஆடியோ எனக்கு கிடைத்துள்ளது. அவர்கள் யார் என்பதும் அவர்களின் முகமும் எனக்கு தெரியும்.

என்னை கொலை செய்துவிட்டு ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் ஒருவர் மீது ஒருவர் பழிபோட முடிவு செய்துள்ளனர். அதன்பிறகு அது மறந்துவிடும் என்றும் கருதுகிறார்கள்.

பல ஆயிரம் கோடி பணம் இருந்தால் அரசியலில் ஜெயிக்க முடியும் என்று சிலர் நினைக்கிறார்கள். அப்படி என்றால் ஆந்திராவில் கடந்த தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டி ஜெயித்திருக்க வேண்டும். முகேஷ் அம்பானி பிரதமர் ஆகி இருக்க வேண்டும். அரசியலில் ஜெயிப்பதற்கு மக்கள் ஆதரவுதான் முக்கியம். அது எனக்கு உள்ளது.

சமீபத்தில் நடந்த ஒரு கருத்து கணிப்பில் ஜெகன் மோகன் ரெட்டிக்கு 43 சதவீதமும், சந்திரபாபு நாயுடுவுக்கு 38 சதவீதமும் உள்ளது. எனக்கு 5 சதவீதம் மக்கள் ஆதரவு மட்டுமே இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் என்னைப் பார்த்து ஏன் பயப்படுகிறார்கள் என்று தெரியவில்லை.

இவ்வாறு அவர் பேசினார். #PawanKalyan
Tags:    

Similar News