செய்திகள்

தந்தை அளித்திருந்த தீர்ப்பை மாற்றிய மகன் - சுப்ரீம் கோர்ட் வரலாற்றில் ஒரு சுவாரசியம்

Published On 2018-09-27 17:22 GMT   |   Update On 2018-09-27 17:22 GMT
திருமண பந்தத்தை தாண்டிய உறவில் ஆண்களை குற்றவாளியாக்கும் சட்ட பிரிவை இன்று நீக்கி தீர்ப்பு வழங்கிய அமர்வில் இருந்த நீதிபதி சந்திரசூட் அவரது தந்தையின் தீர்ப்பை மாற்றியுள்ளார். #AdulteryVerdict #Section497 #JusticeChandrachud
புதுடெல்லி:

திருமண பந்தத்தை தாண்டிய உறவில் ஆண்களை மட்டும் குற்றவாளியாக்கும் சட்டபிரிவு 497-ஐ நீக்கி சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி அமர்வு தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை வழங்கிய அமர்வில் இருந்த நீதிபதி சந்திரசூட், தனது தந்தையின் தீர்ப்புக்கு மாறாக தற்போது தீர்ப்பு வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

கடந்த 1985-ம் ஆண்டில் சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதியாக இருந்த அவரது தந்தை ஓய்.வி.சந்திரசூட், தகாத உறவு தொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்தார். அப்போது, கணவருக்கு தெரியாமல் அவரது மனைவியுடன், தகாத உறவில் ஈடுபடும் நபருக்கு சிறை தண்டனை விதிக்கும் சட்டத்தை உறுதி செய்தார். மேலும், தகாத உறவில் ஈடுபடுவதை குற்றமாக கருதினால் தான், திருமண உறவு பலப்படும் என்றும் தீர்ப்பு வழங்கியிருந்தார்.

அதேபோல, தனி மனித உரிமை குறித்த வழக்கிலும் நீதிபதி சந்திரசூட், தனது தந்தையின் தீர்ப்புக்கு மாறாக தீர்ப்பு வழங்கியிருந்தார். நெருக்கடி நிலை காலத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த ஓய்.வி.சந்திரசூட் இடம்பெற்ற அமர்வு, தனி மனித உரிமை அடிப்படை உரிமை அல்ல என தீர்ப்பு வழங்கியது.

ஆனால், கடந்த ஆகஸ்ட் மாதம் ஆதார் வழக்குடன் தொடர்புடைய வழக்கு ஒன்றில் தீர்ப்பு வழங்கிய டி.ஒய்.சந்திரசூட், தனிப்பட்ட நபரின் வாழ்க்கை மற்றும் தனிநபர்களின் உரிமைகள் மாற்ற முடியாதது. எந்த அரசும் தனிநபர்களின் சுதந்திரத்தில் தலையிட முடியாது என தீர்ப்பு வழங்கியுள்ளார்.
Tags:    

Similar News