செய்திகள்
கோப்புப்படம்

கேரளாவில் 30-ந்தேதி வரை கனமழை எச்சரிக்கை: தயார் நிலையில் பேரிடர் மீட்புக்குழு

Published On 2018-09-27 04:42 GMT   |   Update On 2018-09-27 04:42 GMT
கேரளாவில் வருகிற 30-ந்தேதி வரை மழை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் அனைத்து மாவட்டங்களிலும் பேரிடர் மீட்புக் குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். #KeralaRain #IMD
திருவனந்தபுரம்:

கேரளாவில் கடந்த மாதம் தென்மேற்கு பருவமழை இதுவரை இல்லாத அளவிற்கு கொட்டி தீர்த்தது. இதனால் அந்த மாநிலமே வெள்ளத்தில் தத்தளிக்கும் நிலை உருவானது.

வரலாறு காணாத பேரழிவை சந்தித்த கேரள மாநிலம் அந்த பாதிப்பில் இருந்து தற்போது மீண்டு வருகிறது. கேரளாவிற்கு மத்திய அரசு மற்றும் பல்வேறு மாநில அரசுகள் நிதி உதவிகள் அளித்துள்ளன.

ஆனாலும் மழை பாதிப்பில் இருந்து அந்த மாநிலம் சகஜ நிலைக்கு இன்னும் திரும்பவில்லை. இந்த நிலையில் கேரளாவில் மீண்டும் கனமழை பெய்யுமென்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 26, 27 ஆகிய தேதிகளில் இடுக்கி, வயநாடு, பத்தனம் திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், கோழிக்கோடு, பாலக்காடு, மலப்புரம் மாவட்டங்களில் கனமழை பெய்யுமென்று அறிவிக்கப்பட்டதால் இந்த 8 மாவட்டங்களிலும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

அதன்படி, கேரளாவில் ஒருசில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் பெரிய அளவில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

கோப்புப்படம்

ஆனாலும் இந்த மழை வருகிற 30-ந்தேதி வரை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் பத்தனம்திட்டா, இடுக்கி, மலப்புரம், கோழிக் கோடு ஆகிய மாவட்டங்களுக்கு வருகிற 30-ந்தேதி வரை மஞ்சள் எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.

மேலும் அனைத்து மாவட்டங்களிலும் பேரிடர் மீட்புக் குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபடும்படி அவர்களை மாநில அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த மழை காரணமாக மலை கிராமப்பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் மலை கிராமங்களுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். #KeralaRain #IMD
Tags:    

Similar News