செய்திகள்

ஆதார் அடையாள அட்டை செல்லும்- உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Published On 2018-09-26 06:00 GMT   |   Update On 2018-09-26 08:11 GMT
அரசியல் சாசனத்தின்படி ஆதார் செல்லுபடியாகும் என்றும், ஆதார் எண்களை தனியார் நிறுவனங்கள் கேட்க முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கி உள்ளது. #AadhaarVerdict #JusticeSikri
புதுடெல்லி:

இந்தியாவில் அனைத்து குடிமக்களுக்கும் தனித்தனி எண்கள் கொண்ட அடையாள அட்டை வழங்குவதற்கு மத்திய அரசு முடிவு செய்தது.

அதன்படி கடந்த 2009-ம் ஆண்டு ஆதார் அட்டை வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது.

இந்தியாவில் குறைந்த பட்சம் 182 நாட்கள் வசித்தவர்கள் ஆதார் அடையாள அட்டை பெற தகுதி உடையவர்களாக அறிவிக்கப்பட்டது. இந்த ஆதார் அட்டை 12 இலக்க எண்கள் கொண்டதாகும்.

ஆதார் அட்டையில் கண்ணின் விழித்திரை, கைரேகை ஆகியவற்றுடன் பெயர், முகவரி உள்ளிட்ட அனைத்து குறிப்புகளும் இடம் பெற்றுள்ளன. தனி மனிதர்களின் தகவல்கள் அனைத்தும் கொண்ட ஆதார் அடையாள அட்டை தகவல்கள் ரகசியமாக வைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.

ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டு வந்த நிலையில் மத்திய அரசு வழங்கும் மானியத்தை பெறுவதற்கு ஆதார் எண் அவசியம் என்று மத்திய அரசு அதிரடியாக அறிவித்தது. இதையடுத்து ஆதார் அட்டை பெற்றவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தது.

இதைத்தொடர்ந்து ஆதார் எண்களை வங்கிக்கணக்கு, ரேசன் கார்டு, சமையல் கியாஸ், பாஸ்போர்ட், பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றுடன் இணைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு சேவைகளுக்கு ஆதார் எண் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு ஆதார் எண் அட்டையை ஒவ்வொரு குடிமகனும் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்ற சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இதற்கு நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

சுப்ரீம் கோர்ட்டில் 31 பேர் ஆதார் கட்டாயம் சட்டத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகளின் விசாரணை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூ‌ஷண் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வில் நடந்தது.

விசாரணையின் போது வங்கி கணக்கு, செல்போன் எண், பான் எண் ஆகியவற்றுடன் ஆதார் எண் இணைப்பதை கட்டாயமாக்கியதை ஆதரித்து மத்திய அரசு வாதிட்டது. ஆனால் வழக்கு தொடுத்தவர்கள் தனி மனித சுதந்திரம் பாதிக்கப்படுவதாக வாதிட்டனர்.

அனைத்து தரப்பு வாதங்களும் கடந்த மே மாதம் 10-ந்தேதி முடிந்தது. இதையடுத்து ஆதார் எண் கட்டாயம் ஆகுமா? அல்லது கட்டாயம் இல்லை என்று தீர்ப்பு வருமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் இன்று தீர்ப்பு அளித்தனர்.

முதலில் நீதிபதி ஏ.கே.சிக்ரி தனது தீர்ப்பை வாசித்தார். அவரைத் தொடர்ந்து தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதி ஏ.எம்.கன்வில்கர் ஆகியோரும் தீர்ப்பை வாசித்தார்கள். 5 நீதிபதிகளில் 3 நீதிபதிகள் ஒருமித்த கருத்தை வெளியிட்டதால் அவர்களது தீர்ப்பு ஏகமனதாக அறிவிக்கப்பட்டது.

தீர்ப்பின் முக்கிய அம்சங்களாக அரசியல் சாசனப்படி ஆதார் செல்லும். தனியார் நிறுவனங்கள் ஆதார் தகவல்களை கோருவது சட்ட விரோதம். தனி நபர் கண்ணியத்தை காக்க ஆதார் சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வர வேண்டும். வங்கி கணக்கு, மொபைல் இணைப்பு, பள்ளி சேர்க்கை, நீட், சி.பி.எஸ்.இ. தேர்வு ஆகியவற்றுக்கு ஆதார் அவசியம் இல்லை. பான் எண்ணுக்கு மட்டும் ஆதார் கட்டாயம் என்று உத்தரவிட்டனர்.


1. இந்தியாவில் ஆதார் விவகாரம் கடந்த காலங்களில் அதிகமாக பேசப்பட்டது. எந்த வகையிலும் ஆதார் கார்டை போலியாக தயாரிக்க முடியாது.

2. ஆதாருக்காக குறைந்த பட்ச அத்தியாவசிய தகவல்கள் மட்டுமே பெறப்படுகிறது.

3. ஆதார் திட்டமும், சட்டமும் தனிநபர் சுதந்திரத்தை பாதிக்கிறது என்பது மட்டும் தான் பிரச்சனை.

4. அரசின் நலத்திட்டங்களின் பலன்களை பெறவும், மானியம் பெறவும் ஆதார் அவசியமாகிறது என்ற மத்திய அரசின் கருத்து முக்கியமானது. சமூக நல திட்டங்கள் மக்களுக்கு போய் சேரும் என்ற மத்திய அரசின் எண்ணமும் குறிப்பிடத்தக்கது.

5. ஆதார் என்பது மற்ற அடையாள ஆவணங்கள் போன்றதல்ல. ஆதார் சிறந்ததாக இருப்பதைவிட தனித்துவமானது என்பதே நல்லது. தனித்துவ அடையாளம் என்பது எளிய மக்களுக்கும் அதிகாரம் அளிக்கும்

6. ஆதாருக்கான சட்ட விதிகள் இன்னும் கடுமையாக்கப்பட வேண்டும். சேகரிக்கப்பட்ட தகவல்கள் கசியாமல் பாதுகாத்திட வேண்டும்.

7. தனிநபர்களின் கண்ணியம் காக்கப்பட வேண்டும். தனிநபர் பாதுகாப்பை கவனமுடன் கையாள வேண்டும்.

8. தனியார் நிறுவனங்கள் ஆதார் தகவல்களை கோருவது, ஆதார் கட்டாயம் என்று கூறுவது சட்ட விரோதம்.

9. ஆதார் தகவல்களை கசியவிடக் கூடாது.

10. ஆதாருக்கான காரணம் காட்டி தனி நபர்களின் உரிமை மறுக்கப்படக்கூடாது.

11. ஆதாரில் கையெழுத்து முதல் கைரேகை வரை முக்கியமானது. பாதுகாக்கப்பட வேண்டும். கையெழுத்தை கூட மாற்றலாம். கைரேகையை மாற்ற முடியாது.

12. ஆதாருக்காக பெறப்படும் தகவல்கள் குறைவு. அதனால் கிடைக்கும் பயன்கள் அதிகம்.

13. தனிநபர் கண்ணியம் காக்கப்பட ஆதார் சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வரவேண்டும்.

14. சி.பி.எஸ்.இ., நீட் தேர்வுகளுக்கு ஆதார் கட்டாயம் ஆக்கக் கூடாது.

15. பள்ளியில் குழந்தைகள் சேர்க்கைக்கும் ஆதார் கட்டாயம் இல்லை. ஆதாரை காரணம் காட்டி குழந்தைகளை பள்ளியில் சேர்க்க மறுக்க கூடாது. ஆதாருக்காக கல்வி மற்றும் இதர சலுகைகளை மறுக்க கூடாது.

16. அரசியல் சாசனப்படி ஆதார் செல்லும்.

17. வங்கி கணக்குகளை ஆதாருடன் இணைக்க வேண்டிய அவசியம் இல்லை. வங்கி கணக்குகளுக்கு ஆதார் கட்டாயம் இல்லை.

18 மொபைல் எண்களுக்கும் சிம் கார்டு பெறவும் ஆதார் கட்டாயம் இல்லை.

19. வருமானவரி கணக்கு தொடர்பான பான் எண்ணுக்கு ஆதார் கட்டாயம் ஆகும்.

இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.
Tags:    

Similar News