செய்திகள்
பம்பை ஆற்றின் அருகே கழிவறை காம்பளக்ஸ் பகுதியில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள பாதை

சபரிமலை சன்னிதானம் செல்ல பக்தர்களுக்கு புதிய பாதை

Published On 2018-09-15 13:46 IST   |   Update On 2018-09-15 13:46:00 IST
சபரிமலை செல்லும் பக்தர்கள் சன்னிதானம் செல்ல பம்பை பாலத்தின் அருகே தற்போது புதிய பாதை அமைக்கப்பட்டுள்ளது. #Sabarimala
திருவனந்தபுரம்:

கேரளாவில் கடந்த மாதம் பெய்த பெருமழையால் சபரிமலை பம்பை ஆறு திசை மாறி ஓடியது.

பம்பை திரிவேணி பகுதியில் கழிவறைகள் பகுதியைச் தாண்டி புதிய பாதையில் பம்பை ஆறு ஓடியது. மழை குறைந்து வெள்ளம் வடிந்த பின்பு பம்பை ஆற்றின் கரைகளை சீரமைக்கும் பணி நடந்தது.

இதில் மணலில் மூழ்கிய பாலம் கண்டுபிடிக்கப்பட்டு சீரமைக்கப்பட்டது. தற்போது அந்த பாலம் பக்தர்கள் நடந்து செல்லும் அளவிற்கு மாற்றப்பட்டுள்ளது.

சபரிமலையில் கடந்த மாதம் நிறை புத்தரிசி பூஜை நடந்தபோது மழை வெள்ளம் காரணமாக பக்தர்கள் யாரும் சன்னிதானம் செல்ல அனுமதிக்கப்படவில்லை. இப்போது அங்கு சீரமைப்பு பணிகள் செய்யப்பட்டுள்ளதால் பக்தர்கள் சபரிமலை செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புரட்டாசி மாத பூஜைகளுக்காக நாளை சபரிமலை கோவில் நடை திறக்கப்படுகிறது. வருகிற 21-ந்தேதி வரை நடை திறந்திருக்கும். மாலை 5 மணிக்கு நடை திறந்து புதிய மேல்சாந்தியாக கண்டரரு ராஜீவரரு பொறுப்பேற்றுக் கொள்கிறார்.

சபரிமலை செல்லும் பக்தர்கள் சன்னிதானம் செல்ல பம்பை பாலத்தின் அருகே தற்போது புதிய பாதை அமைக்கப்பட்டுள்ளது. வழக்கமாக சன்னிதானத்தின் முன்பகுதி வழியாக செல்லும் பாதை இப்போது பின் பகுதி வழியாக சென்று சன்னிதானத்தை அடையும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் இம்முறை கனரக வாகனங்கள் எதுவும் பம்பை செல்ல அனுமதிக்கப்படவில்லை. அவை நிலக்கல்லுடன் நிறுத்தப்படும்.

கேரளாவில் மழை வெள்ளம் ஏற்பட்டபோது, பம்பையில் இருந்த கடைகள் அனைத்தும் சேதமாகி விட்டது. எனவே இப்போது சபரிமலை செல்லும் பக்தர்கள் குடிநீர், உணவு போன்றவற்றை உடன் எடுத்து செல்ல வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.  #Sabarimala

Tags:    

Similar News