செய்திகள்

மோடி மீது குற்றம் சாட்டிய முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி 22 ஆண்டு பழைய வழக்கில் கைது

Published On 2018-09-05 09:53 GMT   |   Update On 2018-09-05 09:53 GMT
குஜராத் கலவரத்துக்கு மோடி உடந்தையாக இருந்தார் என குற்றம் சாட்டி பின்னர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பாட், 22 ஆண்டுகால பழைய வழக்கில் இன்று கைது செய்யப்பட்டார். #SanjivBhatt
காந்திநகர்:

குஜராத் மாநிலத்தை சேர்ந்த சஞ்சீவ் பாட் 1996-ம் ஆண்டு பேட்ஜ் ஐபிஎஸ் அதிகாரியாவார். குஜராத் கலவரத்தில் அப்போதைய முதல்வர் மோடி முக்கிய உடந்தையாக இருந்ததாக, சுப்ரீம் கோர்ட்டில் அபிடவிட் தாக்கல் செய்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

தொடர்ந்து பணிக்கு வராத காரணத்தால் கடந்த 2016-ம் ஆண்டு காவல் துறை பதவியில் இருந்து சஞ்சய் பாட் நீக்கப்பட்டார். இந்நிலையில், 22 ஆண்டுகால பழைய வழக்கில் பாட் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

1996-ம் ஆண்டில் சஞ்சீவ் பாட் பனஸ்கந்தா மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளராக இருந்தார். வழக்கில் குறிப்பிட்டுள்ள விவரங்களின்படி, 1996-இல் ஒரு கிலோ அளவில் போதைப் பொருள் வைத்திருந்ததாக சஞ்சீவ் பாட் தலைமையிலான பனஸ்கந்தா போலீஸார் சுமர்சிங் ராஜ்புரோஹித் எனும் வழக்கறிஞரை கைது செய்துள்ளனர். பலன்பூர் நகரில் ராஜ்புரோஹித் தங்கியிருந்த விடுதியில் இருந்து அந்த போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாக பனஸ்கந்தா போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

இதையடுத்து, இந்த வழக்கை விசாரித்த ராஜஸ்தான் போலீஸார், வழக்கறிஞர் ராஜ்புரோஹித் இந்த வழக்கில் தவறாக குற்றம்சாட்டப்பட்டுள்ளார் என்று விசாரணைகளின் அடிப்படையில் தெரிவித்தது. மேலும், ராஜ்புரோஹித் அவரது இல்லத்தில் இருந்து பனஸ்கந்தா போலீஸாரால் கொண்டு வரப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. 

இதற்கிடையில், ராஜ்புரோஹித் தொடுத்த வழக்கின் தீர்ப்பாக குஜராத் ஐகோர்ட் இந்த வழக்கை சிஐடி-க்கு மாற்றியும், விசாரணையை 3 மாதத்துக்குள் முடிக்க வேண்டும் என்றும் கடந்த ஜூன் மாதம் உத்தரவு பிறப்பித்தது.

இந்த விசாரணையில் சஞ்சீவ் பாட்டுக்கு எதிராக கிடைத்த ஆதாரங்கள் அடிப்படையில் அவர் உட்பட பலர் விசாரணைக்காக கைது செய்யப்பட்டுள்ளனர் என்று சிஐடியின் டிஜிபி ஆஷிஷ் பாட்டியா தெரிவித்துள்ளார்.  
Tags:    

Similar News