செய்திகள்

வருமான வரித்துறைக்கு சுப்ரீம் கோர்ட்டு கண்டனம் - ரூ.10 லட்சம் அபராதம் விதித்து உத்தரவு

Published On 2018-09-02 20:09 GMT   |   Update On 2018-09-02 20:09 GMT
வழக்கு ஒன்றில் மேல்முறையீடு செய்ததில் தாமதம் ஏற்படுத்தியது தொடர்பாக வருமான வரித்துறைக்கு சுப்ரீம் கோர்ட்டு கடும் கண்டனம் தெரிவித்ததுடன், ரூ.10 லட்சம் அபராதமும் விதித்தது. #SupremeCourt #IncomeTax
புதுடெல்லி:

உத்தரபிரதேச நகர்ப்புற திட்டமிடல் மற்றும் மேம்பாட்டு சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட ஹபுர் பில்குவா மேம்பாட்டு ஆணையம் (எச்.பி.டி.ஏ.) என்ற அமைப்பு, வருமான வரிச்சட்டத்தில் விலக்கு கேட்டு வருமான வரித்துறைக்கு மனு செய்தது. இதை காசியாபாத் வருமான வரித்துறை ஆணையர் கடந்த 2006-ம் ஆண்டு நிராகரித்தார்.

இதை எதிர்த்து அந்த அமைப்பு வருமான வரித்துறையின் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தை நாடியது. இதை ஏற்றுக்கொண்ட தீர்ப்பாயமும், மானிய பதிவுக்கு ஒப்புக்கொண்டது. இதை எதிர்த்து வருமான வரித்துறை தாக்கல் செய்த மனுவை அலகாபாத் ஐகோர்ட்டு கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்டு 29-ந்தேதி தள்ளுபடி செய்தது.



ஐகோர்ட்டின் இந்த உத்தரவை எதிர்த்து வருமான வரித்துறை சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. இதை விசாரித்த நீதிபதிகள் மதன் பி.லோகுர், அப்துல் நசீர், தீபக் குப்தா ஆகியோரை கொண்ட அமர்வு, மேல்முறையீட்டுக்கு 596 நாட்கள் தாமதமானது ஏன்? என விளக்கம் கேட்டது. இதற்கு போதுமான விளக்கம் அளிக்கப்படவில்லை.

இதைத்தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பாக வருமான வரித்துறைக்கு சுப்ரீம் கோர்ட்டு கடும் கண்டனம் தெரிவித்தது. இது தொடர்பாக நீதிபதிகள் கூறும்போது, ‘தயவு செய்து இப்படி செய்யாதீர்கள். சுப்ரீம் கோர்ட்டு என்பது சுற்றுலா தலம் அல்ல. இந்திய சுப்ரீம் கோர்ட்டை நீங்கள் இப்படித்தான் நடத்துவீர்களா?’ என்று சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

அவர்கள் மேலும் கூறுகையில், ‘வேறுவகையில் சொல்ல வேண்டுமானால், மனுதாரர்கள் (வருமான வரித்துறை) முற்றிலும் தவறான தகவல்களை கோர்ட்டுக்கு வழங்கி இருக்கின்றனர். வருமான வரித்துறை ஆணையர் வழியாக மத்திய அரசு இந்த பிரச்சினையை வெகு இயல்பாக எடுத்துக்கொண்டிருப்பது எங்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது’ என்றும் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து வருமான வரித்துறையின் மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள், தாமதத்துக்கான காரணம் குறித்து கோர்ட்டுக்கு தவறான தகவல்களை அளித்ததற்காக ரூ.10 லட்சம் அபராதம் விதித்தும் உத்தரவிட்டனர். இந்த தொகையை 4 வாரங்களுக்குள் சுப்ரீம் கோர்ட்டின் சட்ட சேவை குழுவிடம் செலுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தினர்.  #SupremeCourt #IncomeTax
Tags:    

Similar News