செய்திகள்

யானைகள் வழித்தட விவகாரம் - விடுதி உரிமையாளர் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்

Published On 2018-08-24 19:33 GMT   |   Update On 2018-08-24 19:33 GMT
யானைகள் வழித்தட விவகாரம் தொடர்பாக தனியார் விடுதி உரிமையாளர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. #ElephantCorridor
புதுடெல்லி:

நீலகிரி மாவட்டம் முதுமலை சரணாலயத்தை ஒட்டியுள்ள கிராமத்தில் யானைகளின் வழித்தடங்களை ஆக்கிரமித்து விடுதி மற்றும் ஓட்டல்கள் கட்டுவதற்கு சென்னை ஐகோர்ட்டு கடந்த 2011-ம் ஆண்டு தடை விதித்தது. இதை எதிர்த்து தனியார் விடுதி உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகள் என 50-க்கும் மேற்பட்டோர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை நீதிபதிகள் மதன் பி.லோகுர், தீபக் குப்தா ஆகியோரை கொண்ட அமர்வு முன்பு நடைபெற்று வருகிறது. அங்கு யானைகள் வழித்தடத்தில் 39 வணிக நிறுவனங்கள் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டு இருப்பதாக மாவட்ட கலெக்டர் கோர்ட்டுக்கு தெரிவித்தார். இதில் 27 விடுதிகள் சார்பில் யாரும் விசாரணைக்கு ஆஜராகவில்லை.

எனவே அவர்கள் கலெக்டரின் அறிக்கையை ஒத்துக்கொள்வதாக ஆகிறது எனக்கூறிய நீதிபதிகள், அந்த 27 விடுதிகளும் 48 மணி நேரத்தில் மூடி ‘சீல்’ வைக்கப்பட வேண்டும் என கடந்த 9-ந்தேதி உத்தரவிட்டனர். மீதமுள்ள 12 விடுதிகளும் அனுமதி பெற்று கட்டப்பட்டதா? என்பதை 48 மணி நேரத்தில் தெரிவிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறினார்கள்.

இதைத்தொடர்ந்து ‘சீல்’ வைக்க உத்தரவிடப்பட்ட ஒரு விடுதியின் உரிமையாளர் சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், ‘தமிழக அரசு குறிப்பிட்டுள்ள யானை வழித்தடத்தில் எங்கள் விடுதி வரவில்லை. வரையறுக்கப்பட்ட எல்லை பகுதிக்கு உள்ளேயும் எங்கள் விடுதி இல்லை. எங்கள் விடுதியின் பெயர் சுப்ரீம் கோர்ட்டில் தவறாக கொடுக்கப்பட்டுள்ளது’ என்று கூறப்பட்டு உள்ளது.


சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவில் இருந்து தங்கள் விடுதியின் பெயரை நீக்கம் செய்து வெளியிட வேண்டும் எனவும், தங்கள் விடுதிக்கு ‘சீல்’ வைக்கும் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணை நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் மதன் பி.லோகுர், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வந்தது. இதில் விசாரணை தொடங்கியதும், இந்த மனு மீது தமிழக அரசு 2 வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். பின்னர் வழக்கின் விசாரணையை இரு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர். #ElephantCorridor
Tags:    

Similar News