செய்திகள்

ராஜீவ்காந்தி கொலைக்கைதிகள் மனு மீது 6-ந்தேதி விசாரணை

Published On 2018-08-20 23:30 GMT   |   Update On 2018-08-20 23:30 GMT
ராஜீவ் காந்தி கொலை கைதிகள் 7 பேர் மீதான விசாரணையை முடித்து வைக்கக்கோரும் மனுவை செப்டம்பர் 6-ந்தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது. #RajivGandhi #Assassination
புதுடெல்லி:

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேரையும் சிறையில் இருந்து விடுதலை செய்யப்போவதாக கடந்த 2014-ம் ஆண்டு தமிழக அரசு அறிவித்தது.

இந்த முடிவை எதிர்த்து அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கூட்டணி அரசு, சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்தது. அதை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட சுப்ரீம் கோர்ட்டு, 7 பேரையும் விடுதலை செய்ய இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

இதற்கிடையே, தாங்கள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளதால் தங்களை விடுவிக்க வேண்டும் என்று கோரி முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் தமிழக அரசுக்கு மனு அளித்தனர்.

அவர்களது கோரிக்கையை பரிசீலித்த தமிழக அரசு, அவர்களை விடுதலை செய்ய முடிவு செய்திருப்பதாகவும், அதற்கு ஒப்புதல் வழங்கவேண்டும் என்றும் கோரி மத்திய அரசுக்கு கடந்த 2016-ம் ஆண்டு கடிதம் எழுதியது.

கடந்த ஏப்ரல் 16-ந்தேதி இவர்களை விடுவிக்க மறுப்பு தெரிவித்து ஜனாதிபதி பிறப்பித்த உத்தரவை மத்திய அரசு வெளியிட்டது. அந்த உத்தரவில், ராஜீவ் காந்தி கொலையில் விடுதலைப்புலிகள் உள்ளிட்ட சில வெளிநாட்டு அமைப்புகளுக்கும் தொடர்பு உள்ளதாக தெரியவந்துள்ளதால் அவர்களை விடுவிக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்காது என்று கூறப்பட்டு இருந்தது.

இந்நிலையில் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், நவீன் சின்கா, கே.என்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் தரப்பில் ஆஜரான வக்கீல்கள் கோபால் சங்கரநாராயணன், பிரபு ராமசுப்பிரமணியன் ஆகியோர் தங்கள் வாதத்தின் போது, மத்திய அரசு 7 பேர் விடுதலைக்கு அனுமதி வழங்க மறுப்பு தெரிவித்து அரசாணை வெளியிட்டுள்ளதால் தற்போது நிலுவையில் உள்ள வழக்கை முடித்து வைக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

இவர்கள் 7 பேரும் ஏற்கனவே தமிழக கவர்னருக்கு கருணை மனு ஒன்றை தாக்கல் செய்து இருப்பதாகவும், சுப்ரீம் கோர்ட்டில் இந்த வழக்கு நிலுவையில் உள்ளதால் அங்கு முடிவு ஏதும் எடுக்க முடியவில்லை என்பதால் இங்குள்ள வழக்கை முடித்து வைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.

அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், 7 பேரின் இடைக்கால மனுவை வரும் செப்டம்பர் 6-ந்தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக உத்தரவு பிறப்பித்தனர்.  #RajivGandhi #Assassination
Tags:    

Similar News