செய்திகள்

கேரளா கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 100-ஐ நெருங்குகிறது

Published On 2018-08-16 15:39 GMT   |   Update On 2018-08-16 15:39 GMT
கேரளாவில் பெய்து வரும் கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை நூறை நெருங்குவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #KeralalRain #Keralafloods
திருவனந்தபுரம்:

கேரளா மாநிலத்தில் கடந்த இரு வாரங்களுக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள அணைகளும், ஏரிகளும் நிரம்பி வழிகின்றன.

மொத்தம் உள்ள 39 அணைகளில் 33 அணைகள் திறக்கப்பட்டுள்ளது. அணைகளில் இருந்து வெளியேறும் தண்ணீர், தொடர் மழையால் கேரளாவின் அனைத்து மாவட்டங்களும் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. இதற்கிடையே, கேரளாவில் பெய்து வரும் கனமழைக்கு இதுவரை 72 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் தெரிவித்தன.

இந்நிலையில், கேரளாவில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கியும், நிலச்சரிவாலும் பலியானோர் எண்ணிக்கை 97 ஆக அதிகரித்துள்ளது.



இன்று ஒரே நாளில் 30க்கு மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இன்று மலப்புரம் மாவட்டத்தில் வீடு இடிந்ததில் 8 பேர் பலியாகினர். பத்தனம்திட்டா, கண்ணூர், வயநாடு, மலப்புரம், கோழிக்கோடு, இடுக்கி, எர்ணாகுளம் உள்பட பல மாவட்டங்களில் வெள்ள பாதிப்பில் சிக்கி 30-க்கு மேற்பட்டோர் பலியாகியுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை 8.30 மணி முதல் நாளை காலை 8.30 மணி வரை கேரளாவில் மிதமிஞ்சிய மழை பெய்யும் என்றும் நாளை (17-ந் தேதி) காலை 8.30 மணி முதல் 19-ந் தேதி காலை 8.30 மணி வரை பலத்த காற்றுடன் மிக பலத்த மழை பெய்யும் என்று  வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால் பொதுமக்கள் தொடர்ந்து அச்சத்தில் உள்ளனர்.

கேரளாவில் கனமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் நேரில் சென்று பார்வையிட்டார். முதல் கட்டமாக கேரள வெள்ள பாதிப்புக்கு ரூ.100 கோடி நிதி உதவியையும் மத்திய அரசு அறிவித்து உள்ளது.

மேலும், கேரளாவிற்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என பிரதமர் நரேந்திர மோடி கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவித்தார். #KeralaRain #Keralafloods
Tags:    

Similar News