செய்திகள்

கருணாநிதிக்கு மெரினாவில் இடம் மறுக்கப்பட்டதால் போராட்டத்தில் இறங்கிய தொண்டர்கள்

Published On 2018-08-07 15:19 GMT   |   Update On 2018-08-07 15:19 GMT
கருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்க தமிழக அரசு மறுத்து மாற்று இடம் வழங்க தயார் என அறிவித்த நிலையில், திமுக தொண்டர்கள் கொதிப்படைந்து போராட்டத்தில் குதித்துள்ளனர். #Karunanidhi #RIPKalaignar #கலைஞர் #Marina4Kalaignar
சென்னை:

காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை 6.10 மணியளவில் காலமானார். இதனை அடுத்து, ஜனாதிபதி, பிரதமர் உள்பட பல தலைவர்கள் அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், கருணாநிதியின் உடல் இறுதி அஞ்சலிக்கு பிறகு நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தின் அருகே கருணாநிதி உடலை அடக்கம் செய்ய ஸ்டாலின் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

ஆனால், மெரினாவில் நினைவிடம் ஒதுக்குவதில் பல சட்ட சிக்கல்கள் உள்ளதால், சென்னை காந்தி மண்டபம் அருகே 2 ஏக்கர் நிலம் ஒதுக்க அரசு தயாராக இருப்பதாக தலைமை செயலாளர் அறிவித்தார்.

இந்நிலையில், 80 ஆண்டு கால பொதுவாழ்வுக்கு சொந்தக்காரரான கருணாநிதிக்கு உரிய மரியாதையுடனும், அரசியல் ரீதியாக அவருக்குள்ள தார்மீக உரிமையின் அடிப்படையிலும் தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும் என ஸ்டாலின் முதல்வருக்கு கடிதம் எழுதியிருந்தார்.

மெரினாவில் இடம் மறுக்கப்பட்டுள்ளதால் திமுக தொண்டர்கள் கொதிப்படைத்தனர். தமிழகத்தில் பல இடங்களிலும் சாலை மறியல் நடந்து வருகிறது. காவேரி மருத்துவமனையின் வெளியே பேரிகார்டுகள் உடைக்கப்பட்டன. இதனால், அங்கு பரபரப்பான சூழல் நடந்து வருகிறது.

மேலும், மெரினாவில் கருணாநிதிக்கு இடம் ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி #Marina4Kalaignar என்ற ஹேஷ்டேக்கும் ட்விட்டரில் டிரெண்ட் ஆகி வருகிறது.
Tags:    

Similar News