செய்திகள்

எஸ்சிஎஸ்டி சட்டம், என்ஆர்சி விவகாரம் - மக்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் அமளி

Published On 2018-08-02 08:13 GMT   |   Update On 2018-08-02 08:13 GMT
மக்களவையில் இன்று எஸ்சிஎஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம், என்ஆர்சி உள்ளிட்ட பிரச்சினைகளை முன்வைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். #NRCIssue #SCSTAct #LokSabhaProtests
புதுடெல்லி:

மக்களவை இன்று கூடியதும் கேள்வி நேரத்தை ஒத்திவைத்துவிட்டு, முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை வலிமைப்படுத்தும் சட்டத்திருத்த மசோதாவை உடனடியாக தாக்கல் செய்ய வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தினார். அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) வரைவு பட்டியல் வெளியான பிறகு, வங்கதேசத்தைச் சேர்ந்த மக்களுக்கு தொந்தரவு கொடுக்கப்படுவதாகவும், அவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் சுகதா ராய் வலியுறுத்தினார். இதேபோல் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி தெலுங்குதேசம் கட்சி எம்பிக்கள் முழக்கமிட்டனர்.



இப்படி பல்வேறு விவகாரங்களை முன்வைத்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையின் மையப்பகுதிக்கு வந்து முழக்கங்கள் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். இதனால் கூச்சல் குழப்பம் நிலவியது. எனினும், கேள்வி நேரத்தை ஒத்திவைக்க மறுத்த சபாநாயகர் சுமித்ரா மகாஜன், அவையை தொடர்ந்து நடத்தினார்.

இதனால் அதிருப்தி அடைந்த உறுப்பினர்கள் அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். பின்னர் அவர்களை அமைதியாகச் சென்று தங்கள் இருக்கைகளில் அமரும்படி சபாநாயகர் கேட்டுக்கொண்டார். ஜீரோ அவரில் அனைத்து கட்சிகளுக்கும் பேச வாய்ப்பு வழங்கப்படும் எனவும் தெரிவித்தார். அதன்பிறகு உறுப்பினர்கள் தங்கள் இருக்கைகளுக்கு திரும்பினர். #NRCIssue #SCSTAct #LokSabhaProtests
Tags:    

Similar News