செய்திகள்

சோனியாகாந்தியை நாளை சந்திக்கிறார் மம்தா பானர்ஜி

Published On 2018-07-31 05:50 GMT   |   Update On 2018-07-31 05:50 GMT
மம்தா பானர்ஜி தனது கூட்டாட்சி முன்னணியில் காங்கிரஸ் கட்சியை சேர்க்க திட்டமிட்டுள்ளார். இதற்காக அவர் இன்று டெல்லி செல்கிறார். அப்போது அவர் சோனியாகாந்தியை சந்தித்து பேச உள்ளார். #Congress #SoniaGandhi #MamataBanerjee
புதுடெல்லி:

மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியை வீழ்த்த எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஓரணியில் திரட்ட காங்கிரஸ் கட்சி முயற்சி செய்தது.

குறிப்பாக மாநிலங்களில் வலுவாக உள்ள பா.ஜ.க.வுக்கு எதிரான கட்சிகளை தனக்கு ஆதரவாக மாற்றலாம் என்று காங்கிரஸ் தலைவர்கள் நினைத்தனர்.

ஆனால் மாநிலங்களில் வலுவாக உள்ள கட்சிகள் காங்கிரசிடம் கூட்டணி சேருவதற்கு தயக்கம் தெரிவித்துள்ளன. தேவேகவுடாவின் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியை தவிர வேறு எந்த கட்சியும் இதுவரை காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியை ஏற்கவில்லை.

மேற்கு வங்காளத்தில் ஆளும் கட்சியாக உள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி கூட்டாட்சி முன்னணி என்று ஒரு புதிய கூட்டணியை உருவாக்கி உள்ளார். அதற்கு ஆதரவு திரட்டும் வகையில் வருகிற 19-ந்தேதி மிகப்பெரிய கூட்டத்தை நடத்த ஏற்பாடு செய்து வருகிறார்.

உத்தரபிரதேசத்தில் வலுவாக உள்ள சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், பீகாரில் கணிசமான செல்வாக்கு பெற்ற ராஷ்டீரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளும் காங்கிரஸ் கட்சியுடன் சேர ஆர்வம் காட்டவில்லை. இதையடுத்து பிரதமர் பதவியை கூட்டணி கட்சிக்கு விட்டுத்தர தயார் என்று காங்கிரஸ் சார்பில் அறிவிக்கப்பட்டது.

கோப்புப்படம்

காங்கிரஸ் கட்சி எல்லா வகையிலும் இறங்கி வந்து இருப்பதால் அந்த கட்சியுடன் சேரலாமா? என்று மாநில கட்சிகள் விவாதிக்க தொடங்கி உள்ளன. மம்தா பானர்ஜி தனது கூட்டாட்சி முன்னணியில் காங்கிரஸ் கட்சியை சேர்க்க திட்டமிட்டுள்ளார். இதற்காக அவர் இன்று டெல்லி செல்கிறார். நாளை (புதன்கிழமை) சோனியாகாந்தியை சந்தித்து பேச உள்ளார். அப்போது கூட்டணியில் சேர அழைப்பு விடுப்பார் என்று தெரிகிறது.

அதுபோல் ராஷ்டீரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்சி யாதவ், முன்னாள் மத்திய மந்திரி யஷ்வந்த் சின்கா ஆகியோரை சந்தித்து பேச உள்ளார்.

இதற்கிடையே காங்கிரஸ் கட்சியும் தனது தலைமையில் கூட்டணி அமைக்க முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், மதசார் பற்ற ஜனதா தளம் தலைவர் தேவேகவுடா ஆகியோரை அதற்கு உதவ கேட்டு கொண்டுள்ளனர். சரத்பவார் மூலம் மாயாவதியிடம் பேசுவதற்கு காங்கிரஸ் தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களிலும் கூட்டணி ஏற்படுத்த காங்கிரஸ் முயன்று வருகிறது. ஆனால் பெரும்பாலான கட்சிகள் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேர தயங்கிய நிலையில் உள்ளது. #Congress #SoniaGandhi #MamataBanerjee
Tags:    

Similar News