செய்திகள்

கும்பலாக தாக்கும் சம்பவங்களை தடுக்க புதிய சட்டம் - ராஜ்நாத் சிங் தலைமையில் உயர்மட்ட குழு

Published On 2018-07-23 14:10 GMT   |   Update On 2018-07-23 14:10 GMT
பசு காவலர்கள் மற்றும் குழந்தை கடத்தல் வதந்தியை நம்பி சட்டத்தை கையில் எடுத்து கும்பலாக தாக்குதல் சம்பவங்களை கட்டுப்படுத்த, மத்திய உள்துறை மந்திரி தலைமையில் உயர்மட்ட குழு அமைக்கப்பட உள்ளது. #MobLynching
புதுடெல்லி:

பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் ஒரு சிலர் சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு அப்பாவி மக்களை கடுமையாக தாக்கி கொலை செய்யும் சம்பவங்கள் வடமாநிலங்களில் சர்வ சாதாரணமாக அரங்கேறி வருகிறது. மேலும், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவும் குழந்தை கடத்தல் வதந்திகளை நம்பி பலர் அப்பாவிகளை அடித்துக்கொன்றுள்ளனர்.

இதுபோன்ற வெறியாட்டத்தை அண்மையில் கடுமையாக கண்டித்த சுப்ரீம் கோர்ட்டு இது வெறும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை மட்டுமல்ல, மிகப்பெரிய குற்றமும் ஆகும் என்று கூறி யாரும் சட்டத்தை கைகளில் எடுத்துக்கொள்ள மாநில அரசுகள் அனுமதிக்க கூடாது என்றும் உத்தரவிட்டு இருந்தது. மேலும், இதனை தடுக்க புதிய சட்டத்தை அரசு இயற்றலாம் எனவும் கருத்து தெரிவித்திருந்தது.

சமீபத்தில் ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில் பசு குண்டர்களால் ஒருவர் அடித்துக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், இந்த வகை கும்பல்களின் அட்டகாசத்தை அடக்க புதிய சட்டம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.



இதன் முதல்கட்ட பணியாக மத்திய உள்துறை செயலாளர் தலைமையில் உயர்மட்ட குழு அமைக்கப்பட உள்ளது. இந்த குழு நான்கு வாரங்களில் இது தொடர்பான பரிந்துரைகளை உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையிலான மூத்த மந்திரிகள் குழுவிடம் சமர்பிக்கும்.

ராஜ்நாத் சிங் தலைமையிலான மந்திரிகள் குழு இந்த பரிந்துரைகளை பரிசீலித்து, அதில் உள்ள அம்சங்களை ஆராய்ந்து பின்னர், தங்களது பரிந்துரையை பிரதமர் மோடியிடம் சமர்பிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News