செய்திகள்

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதாக மோடி ஒருபோதும் வாக்குறுதி அளிக்கவில்லை - ஆந்திர பாஜக தலைவர்

Published On 2018-07-22 14:13 GMT   |   Update On 2018-07-22 14:13 GMT
ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி வாக்குறுதி அளிக்கவே இல்லை என ஆந்திர பாஜக தலைவர் கண்ணா லக்சுமிநாராயணா தெரிவித்துள்ளார். #AndhraPradesh #BJP
ஐதராபாத்:

மோடி தலைமையிலான மத்திய அரசு ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கவில்லை எனவும், ஆந்திர மாநிலத்தை வஞ்சித்து விட்டதாகவும், அம்மாநில முதல்மந்திரி சந்திரபாபு நாயுடு, தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகினார்.

இதையடுத்து, சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி, கடந்தமுறை நடந்த பாராளுமன்ற கூட்டத்தை முடக்கிய தெலுங்கு தேசம் கட்சி, இந்தமுறை மத்திய அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்தது.

இந்நிலையில், இன்று கட்சி உறுப்பினர்களுடனான நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பா.ஜ.க.வின் ஆந்திர மாநில தலைவர் கண்ணா லக்சுமிநாராயணா, ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என மோடி வாக்குறுதி அளிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.



மேலும், சிறப்பு அந்தஸ்துக்கு பதிலாக வேறு பல்வேறு சலுகைகளை தர மத்திய அரசு முன்வந்ததாகவும், அதனை சந்திரபாபு நாயுடு ஏற்றுக்கொண்டார் ஆனால் தற்போது மாற்றி பேசுகிறார் எனவும் சாடியுள்ளார்.

இதையடுத்து, போலவரம் திட்டத்துக்கு கூடுதல் நிதி மத்திய அரசிடம் இருந்து அளிக்கப்பட்டதாகவும், ஆனால், அதிலும் ஊழல் மட்டுமே நடப்பதாகவும் குற்றம்சாட்டிய மாநில தலைவர் கண்ணா லக்சுமிநாராயணா, மாநில அரசின் ஊழலை திசை திருப்பவே நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டதாக விமர்சித்துள்ளார். #AndhraPradesh #BJP
Tags:    

Similar News