செய்திகள்

'இந்து பாகிஸ்தான்' கருத்து - சசிதரூர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆதரவாளர்களை விரட்டியடித்த பா.ஜ.க.

Published On 2018-07-18 06:07 GMT   |   Update On 2018-07-18 06:07 GMT
சசி தரூரின் இந்து பாகிஸ்தான் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திருவனந்தபுரத்தில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தை பா.ஜ.க.வினர் முற்றுகையிட்டு, ஆதரவாளர்களை விரட்டியடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. #ShashiTharoor #BJP
திருவனந்தபுரம்:

திருவனந்தபுரம் தொகுதி காங்கிரஸ் எம்.பி.யான சசிதரூர் தனது பேச்சுக்கள் மூலம் அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வருகிறார். மத்தியில் பாரதிய ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவை அந்த கட்சி இந்து பாகிஸ்தானாக மாற்றிவிடும் என்று சசிதரூர் சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

சசிதரூரின் இந்த கருத்துக்கு பாரதிய ஜனதா கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் திருவனந்தபுரத்தில் உள்ள சசிதரூரின் அலுவலகத்தை பாரதிய ஜனதா இளைஞர் அணியினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அந்த அலுவலகம் மீது கறுப்பு நிற மையும் வீசப்பட்டது.

அந்த அலுவலகத்திற்கு சசிதரூர் எம்.பி.யை சந்திப்பதற்காக காத்திருந்த பொது மக்களையும் அவர்கள் விரட்டி அடித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது பற்றி திருவனந்தபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார், பாரதிய ஜனதா கட்சியினர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதற்கிடையில் தங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை அறிந்ததும் பாரதிய ஜனதா இளைஞர் அணியினர் 5 பேர் திருவனந்தபுரம் போலீஸ் நிலையத்திற்கு சென்றனர். தங்களுக்கு எதிராக போலீசார் வழக்குப்பதிவு செய்தது பற்றி கேட்டு அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

இதைதொடர்ந்து பாரதிய ஜனதா இளைஞர் அணியை சேர்ந்த 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். பிறகு அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக சசிதரூர் சென்றபோது அவருக்கு பாரதிய ஜனதா தொண்டர்கள் கருப்பு கொடி காட்டினார்கள். அவர்களை போலீசார் அங்கிருந்து விரட்டியடித்தனர். சசிதரூருக்கு எதிரான தங்களது போராட்டம் மேலும் தீவிரம் அடையும் என்று பாரதிய ஜனதா கட்சியினர் அறிவித்துள்ளனர்.

இதனால் திருவனந்தபுரத்தில் உள்ள சசிதரூரின் அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. #ShashiTharoor #BJP
Tags:    

Similar News