செய்திகள்

இந்து பாகிஸ்தான் கருத்துக்கு எதிராக வழக்கு - டுவிட்டர், பேஸ்புக் மூலம் சசி தரூருக்கு சம்மன்

Published On 2018-07-14 05:17 GMT   |   Update On 2018-07-14 05:17 GMT
பா.ஜ.க. மீண்டும் ஆட்சியமைத்தால் இந்தியா இந்து பாகிஸ்தானாக மாறிவிடும் என பேசிய சசி தரூருக்கு எதிராக கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. #HinduPakistan #ShashiTharoor
கொல்கத்தா:

பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் இந்தியா, இந்து பாகிஸ்தானாக மாறிவிடும் என்றும், இதற்கான நடவடிக்கைகளை பாரதிய ஜனதா கட்சி செய்து வருவதாகவும் காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவரது கருத்திற்கு பா.ஜ.க. கடும் கண்டனம் தெரிவித்தது. இதையடுத்து சசி தரூரை காங்கிரஸ் கண்டித்தது. பொது மேடைகளில் பேசும்போது கவனத்துடன் பேச வேண்டும் என்றும் அறிவுறுத்தியது. ஆனால் தன் கருத்தில் இருந்து பின்வாங்காத சசி தரூர், மன்னிப்பு கேட்கவும் மறுத்துவிட்டார்.

இந்நிலையில், சசி தரூரின் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு எதிராக கொல்கத்தாவைச் சேர்ந்த வழக்கறிஞர் சுமீத் சவுத்ரி, கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தனது மனுவில், சசி தரூரின் கருத்துக்கள் மத உணர்வுகளை புண்படுத்துவதாகவும், அரசியலமைப்பை அவமதிப்பதாகவும் இருப்பதாக கூறியுள்ளார்.

இந்த வழக்கை இன்று விசாரித்த கொல்கத்தா உயர்நீதிமன்றம், சசி தரூருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. அதில், வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆகஸ்ட் 14-ம் தேதி ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. வழக்கமான சட்ட நடைமுறைகள் மட்டுமின்றி அவரது அதிகாரப்பூர்வ டுவிட்டர் மற்றும் பேஸ்புக் முகவரிகளுக்கும் சம்மனை அனுப்ப நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

இந்திய நீதித்துறை வரலாற்றில் டுவிட்டர் மூலம் சம்மன் அனுப்புவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. #HinduPakistan #ShashiTharoor
Tags:    

Similar News