செய்திகள்
எம்.எம்.ஜேக்கப்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் எம்.எம்.ஜேக்கப் மரணம்- பிரதமர் மோடி இரங்கல்

Published On 2018-07-09 05:35 GMT   |   Update On 2018-07-09 05:35 GMT
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மேகாலயா மாநில முன்னாள் கவர்னருமான எம்.எம்.ஜேக்கப் உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரம்:

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மேகாலயா மாநில முன்னாள் கவர்னராகவும் இருந்தவர் எம்.எம்.ஜேக்கப் (வயது90).

கேரள மாநிலம் கோட்டயத்தை அடுத்த பாலாவைச் சேர்ந்தவர் எம்.எம். ஜேக்கப். வயது முதிர்வு காரணமாக கடந்த சில மாதங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார். பாலாவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த எம்.எம்.ஜேக்கப் நேற்று காலை சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இவரது இறுதி சடங்கு இன்று பிற்பகல் நடக்கிறது. எம்.எம்.ஜேக்கப்பின் சொந்த ஊரான பாலா, ராமபுரத்தில் உள்ள புனித அகஸ்டின் ஆலயத்தில் நடக்கும் திருப்பலிக்கு பிறகு உடல் அடக்கம் நடைபெறுகிறது.

எம்.எம்.ஜேக்கப் 1928-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9-ந்தேதி பிறந்தார். பள்ளி படிப்பை கேரளாவிலும், கல்லூரி படிப்பை சென்னை லயோலா கல்லூரி மற்றும் லக்னோ பல்கலைக்கழகத்திலும் படித்தார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக திகழ்ந்த எம்.எம்.ஜேக்கப் மாநில மந்திரியாகவும், மத்திய மந்திரியாகவும் பதவி வகித்தவர்.

டெல்லி மேல் சபை துணைத்தலைவராகவும் இருந்தார். அதன் பிறகு மேகாலயா மாநில கவர்னராக 2 முறை பதவி வகித்தார்.


எம்.எம்.ஜேக்கப் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கேரள மாநில வளர்ச்சிக்கு சிறந்த சேவை ஆற்றியவர் எம்.எம்.ஜேக்கப். மிகச்சிறந்த பாராளுமன்றவாதியாகவும் திகழ்ந்தார். அதோடு மத்திய மந்திரி பொறுப்பிலும், கவர்னராகவும் சிறப்பாக செயல்பட்டவர். அவரது மறைவால் வருந்தும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

இது போல காங்கிரஸ் தலைவர்கள், பல்வேறு கட்சி தலைவர்களும் எம்.எம். ஜேக்கப் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இறந்து போன எம்.எம். ஜேக்கப்பின் மனைவி அச்சம்மாள். இவர் ஏற்கனவே இறந்து விட்டார். #MMJacob
Tags:    

Similar News