செய்திகள்

தேர்தலில் காங்கிரசோடு இணைந்து தேசியவாத காங்கிரஸ் போட்டி - சரத்பவார் அறிவிப்பு

Published On 2018-07-04 12:01 IST   |   Update On 2018-07-04 12:01:00 IST
பாராளுமன்ற- சட்டமன்ற தேர்தலில் காங்கிரசோடு இணைந்து போட்டியிட போவதாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் அறிவித்துள்ளார். #NCP #SharadPawar
மும்பை:

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-

2004-ல் இருந்து 2014 வரை பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசோடு இணைந்து நாங்கள் போட்டியிட்டோம். ஆனால் மராட்டியத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் நாங்கள் தனித்தனியாக போட்டியிடும் நிலை ஏற்பட்டது. அதே நேரத்தில் இனிவரும் பாராளுமன்ற தேர்தலிலும், சட்டசபை தேர்தலிலும் நாங்கள் ஒன்றாக இணைந்து போட்டியிடுவோம்.

இது சம்பந்தமாக ராகுல்காந்தியும், நானும் 3 தடவை சந்தித்து பேசி இருக்கிறோம். கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி மாநில தலைவர்களுக்கு நாங்கள் தகவல் சொல்லிவிட்டோம். தொகுதி பங்கீடு குறித்து மாநில தலைவர்கள் பேசுவார்கள்.

தொகுதி பங்கீட்டை ஒரு வாரத்தில் இறுதி செய்ய முடியும். அதில், ஏதேனும் பிரச்சினைகள் வந்தால் நாங்கள் தலையிட்டு முடிவுக்கு கொண்டு வருவோம்.

பாரதிய ஜனதாவையும், சிவசேனாவையும் தோற்கடிக்க வேண்டும் என்பது தான் எங்களது ஒரே நோக்கம். பாரதிய ஜனதாவையும், சிவசேனாவும் ஒரே அணியில் நின்று தேர்தலில் போட்டியிடுமா? அல்லது தனித்து நிற்குமா? என்று தெரியாது.

ஆனாலும், இப்போதும் சிவசேனா ஆட்சியில் பங்கெடுத்து வருகிறது. எது எப்படி இருந்தாலும் நாங்கள் அவர்களை சந்திக்க தயாராக இருக்கிறோம்.

இவ்வாறு சரத்பவார் கூறினார். #ParliamentElection #NCP #SharadPawar #NationalistCongressParty
Tags:    

Similar News