செய்திகள்

இந்திரா காந்தியை ஹிட்லருடன் ஒப்பிட்டு அருண் ஜெட்லி கடுமையான விமர்சனம்

Published On 2018-06-25 14:07 GMT   |   Update On 2018-06-25 14:07 GMT
நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டதன் 43-ம் ஆண்டு தினம் அனுசரிக்கப்படும் நிலையில், இந்திரா காந்தியை ஹிட்லருடன் ஒப்பிட்டு மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி கருத்து பதிவிட்டுள்ளார்.
புதுடெல்லி:

நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டதன் 43-வது ஆண்டு தினம் அனுசரிக்கப்படும் நிலையில் தன்னுடைய முகநூலில் கட்டுரை ஒன்றை பதிவிட்டுள்ள அருண் ஜெட்லி, மறைந்த பிரதமர் இந்திரா காந்தி, ஜெர்மனி சர்வாதிகாரி ஹிட்லர் பயன்படுத்திய முறையை பயன்படுத்தினார் என கடுமையாக விமர்சித்துள்ளார்.

இந்திரா காந்தி ஜனநாயகத்தை பேரரச ஜனநாயகமாக மாற்ற நெருக்கடி நிலையை பிரகடனம் செய்ய முடிவுசெய்தார் என குற்றம் சாட்டியுள்ளார். நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்ட காலங்களில் நடந்த சம்பவங்களை பதிவிட்டுள்ள அருண் ஜெட்லி, 

எதிர்க்கட்சி தலைவர்கள் சிறையிடப்பட்டார்கள். பத்திரிக்கை சுதந்திரம் நசுக்கப்பட்டது. கட்டாயமாக கருத்தடை செய்யப்பட்டது. இதேபோன்று  1933-ல் நாஜி ஜெர்மனியிலும் நடந்தது. ஹிட்லரும், இந்திரா காந்தியும் அரசியலமைப்பை ரத்து செய்தார்கள். அவர்கள், ஜனநாயகத்தை சர்வாதிகாரமாக மாற்றுவதற்கு குடியரசு அரசியலமைப்பை பயன்படுத்தினார்கள் என பட்டியலிட்டுள்ளார். 



அரசியல் சாசன சட்டப்பிரிவு 352-ன் கீழ் அவசரநிலைப் பிரகடனம் மேற்கொண்ட இந்திரா காந்தி, இதில் அடிப்படை உரிமைகளுக்கான 359-ம் பிரிவை முடக்கினார், செயலிழக்கச் செய்தார். இதுபோன்று ஹிட்லரும் ஜெர்மனி அரசியல் சட்டம் 48-ம் பிரிவை சுட்டிக்காட்டி, மக்களைப் பாதுகாப்பது என்ற பெயரில் சர்வாதிகாரச் செயல்களை நியாயப்படுத்தினார் என்பதையும் குறிப்பிட்டுள்ளார் அருண் ஜெட்லி.

அருண் ஜெட்லியின் கருத்தை விமர்சனம் செய்துள்ள காங்கிரஸ் இந்த ஒப்பீடு மிகவும் மோசமானது என்ற கண்டனம் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News