செய்திகள்

2 வக்கீல்களை நீதிபதியாக்கும் விவகாரம்: கொலிஜியத்தின் பரிந்துரை மீண்டும் நிராகரிப்பு

Published On 2018-06-24 20:39 GMT   |   Update On 2018-06-24 20:39 GMT
வழக்குகளுக்காக தொடர்ந்து ஆஜராகி வரும் முகமது மன்சூர், பஷரத் அலிகான் ஆகிய 2 வக்கீல்களை நீதிபதியாக்கும் விவகாரத்தில் கொலிஜியத்தின் பரிந்துரையை மத்திய அரசு மீண்டும் நிராகரித்துள்ளது. #CollegiumJudges #SupremeCourt
புதுடெல்லி:

உத்தரபிரதேசத்தின் அலகாபாத் ஐகோர்ட்டில் வழக்குகளுக்காக தொடர்ந்து ஆஜராகி வரும் முகமது மன்சூர், பஷரத் அலிகான் ஆகிய 2 வக்கீல்களை அந்த கோர்ட்டின் நீதிபதிகளாக நியமிக்குமாறு மத்திய அரசுக்கு கொலிஜியம் அமைப்பு பரிந்துரைத்தது. ஆனால் அவர்கள் இருவர் மீதும் புகார்கள் இருப்பதாக கூறி அந்த பரிந்துரையை மத்திய அரசு ஏற்கனவே திருப்பி அனுப்பியது.

எனினும் அந்த புகார்கள் அனைத்தும் அற்பமானவையே எனக்கூறி மீண்டும் அவர்களது பெயரை கொலிஜியம் அமைப்பு பரிந்துரை செய்தது. இந்த பரிந்துரையை 2½ ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் போட்டிருந்த மத்திய அரசு, தற்போது மீண்டும் நிராகரித்து உள்ளது. இதுதொடர்பாக மறு ஆய்வு செய்யுமாறு கூறி, கொலிஜியத்தின் பரிந்துரையை மத்திய அரசு திருப்பி அனுப்பி உள்ளது.

கொலிஜியத்தில் உறுப்பினராக இருந்த சுப்ரீம் கோர்ட்டு மூத்த நீதிபதி செல்லமேஸ்வர் கடந்த வாரம் ஓய்வு பெற்ற நிலையில், புதிய உறுப்பினரை நியமித்த பின்னரே இந்த விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது.

இதற்கிடையே காஷ்மீர் ஐகோர்ட்டில் நீதிபதியாக நியமிக்கக்கோரி அனுப்பி வைக்கப்பட்ட வக்கீல் நஜிர் அகமது பெய்க்கின் பெயரையும் திருப்பி அனுப்ப மத்திய அரசு முடிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. 
Tags:    

Similar News