செய்திகள்

மாநிலத்தில் முதலிடம் பிடித்தும் கோச்சிங் போக பணம் இல்லாததால் ஐஐடி கனவை தியாகம் செய்த மாணவன்

Published On 2018-06-12 15:48 GMT   |   Update On 2018-06-12 15:48 GMT
பள்ளி இறுதியாண்டு தேர்வில் 98.40 சதவிகித மதிப்பெண் எடுத்தும் கோச்சிங் செல்ல பணம் இல்லாததால் சத்தீஸ்கர் மாணவர் தனது ஐஐடி கனவை தியாகம் செய்துவிட்டு பி.எஸ்சி படிக்க சேர்ந்துள்ளார்.
ராய்ப்பூர்:

சத்தீஸ்கர் மாநிலம் சிம்கா பகுதியை சேர்ந்த சிவ்குமார் பாண்டே என்ற மாணவர், நடந்து முடிந்த பள்ளி இறுதியாண்டு தேர்வில் மாநிலத்திலேயே முதலிடம் பிடித்தார். 3.6 லட்சம் மாணவர்கள் எழுதிய தேர்வில் 98.40 சதவிகித மதிப்பெண் எடுத்த சிவ்குமார் பாண்டே எப்படியாவது ஐஐடி.யில் பொறியியல் படிக்க வேண்டும் என முயன்று வந்தார்.

ஆனால், ஐஐடி.யில் சேர நுழைவுத்தேர்வு எழுத வேண்டும். நுழைவுத்தேர்வுக்கு பயிற்சி பெற கோச்சிங் போக வேண்டும். இதற்கு அதிக செலவாகும். தனது தந்தையால் அதிகம் செலவு செய்ய இயலாது என்பதால், தனது ஐஐடி கனவை தியாகம் செய்துவிட்டு ஊருக்கு அருகில் உள்ள கல்லூரியில் பி.எஸ்சி சேர்ந்துள்ளார்.

ஏற்கனவே, சிவ்குமாரின் மூத்த சகோதரர் பொறியியல் கல்லூரியில் சேர்ந்து பணம் செலவளிக்க முடியாமல் பாதியிலேயே படிப்பை கைவிட்டுள்ளார். எல்.ஐ.சி ஏஜெண்ட் ஆக இருக்கும் சிவ்குமாரின் தந்தை மாதம் 12 ஆயிரம் ரூபாய் மட்டுமே சம்பாதிக்கும் நிலையில், மகனின் கல்விக்கு அரசு உதவ வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். 

மாநிலத்தில் முதலிடம் பிடித்தவர்களுக்கு வழங்கப்படும் அரசு பணம், செப்டம்பர் மாதம்தான் கையில் கிடைக்கும் என்பதால், அதனை விரைந்து வழங்கினால் மகனின் கல்விக்கு உதவியாக இருக்கும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
Tags:    

Similar News