செய்திகள்

7 பேரை எரித்து கொன்றவருக்கு தூக்கு உறுதி: முதல் முறையாக கருணை மனுவை நிராகரித்தார் ஜனாதிபதி

Published On 2018-06-03 23:52 GMT   |   Update On 2018-06-03 23:52 GMT
2006-ம் ஆண்டு 7 பேரை எரித்து கொன்ற ஜகத் ராயின் கருணை மனுவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நிராகரித்தார். இந்த தகவலை ஜனாதிபதியின் செயலகம் தெரிவித்துள்ளது. #RamnathKovind
புதுடெல்லி:

பீகார் மாநிலம் வைசாலி மாவட்டத்தை சேர்ந்தவர் மாக்தோ. இவர் கடந்த 2005-ம் ஆண்டு செப்டம்பர் மாதம், தான் வளர்த்து வந்த எருமை மாட்டை திருடியதாக அதே பகுதியை சேர்ந்த ஜகத் ராய், வசீர் ராய், அஜய் ராய் ஆகியோர் மீது போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரை திரும்ப பெறுமாறு அவர்கள் 3 பேரும் மாக்தோவை மிரட்டினர்.

ஆனாலும் அவர் புகாரை திரும்பபெறவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த ஜகத் ராய், கடந்த 2006-ம் ஆண்டு மாக்தோவின் வீட்டுக்கு தீவைத்தார். இதில் மாக்தோ, அவருடைய மனைவி மற்றும் 5 குழந்தைகள் பரிதாபமாக உயிர் இழந்தனர். இது தொடர்பான வழக்கில் ஜகத் ராயுக்கு தூக்கு தண்டனை விதித்து வைசாலி மாவட்ட கோர்ட்டு உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை கடந்த 2013-ம் ஆண்டு பீகார் ஐகோர்ட்டும், சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்தது. இதையடுத்து தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி ஜகத் ராய், ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பினார்.

இந்த நிலையில், ஜகத் ராயின் கருணை மனுவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நிராகரித்தார். இந்த தகவலை ஜனாதிபதியின் செயலகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் ஜகத் ராயின் தூக்கு தண்டனை உறுதியாகி இருக்கிறது. ராம்நாத் கோவிந்த் ஜனாதிபதியாக பதவியேற்ற கொண்ட பின்னர் அவர் நிராகரித்த முதல் கருணை மனு இது என்பது குறிப்பிடத்தக்கது.  #RamnathKovind
Tags:    

Similar News