செய்திகள்

குஜராத்தில் தலித் வாலிபர் அடித்துக்கொலை: 5 பேர் கைது

Published On 2018-05-21 23:33 GMT   |   Update On 2018-05-21 23:33 GMT
குஜராத்தில் தலித் வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்டது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் ஜெய்சுக் ரடாடியா உள்ளிட்ட 5 பேரையும் கைது செய்தனர்.
ராஜ்கோட்:

குஜராத்தின் ராஜ்கோட் அருகே உள்ள தொழிற்பேட்டை பகுதியில் முகேஷ் வனியா என்ற தலித் வாலிபர் தனது மனைவியுடன் நேற்று முன்தினம் குப்பை பொறுக்கிக்கொண்டு இருந்தார். அங்குள்ள ரடாடியா கம்பெனி அருகே அவர்கள் இந்த பணியை செய்து கொண்டிருந்த போது, அந்த கம்பெனியின் உரிமையாளர் ஜெய்சுக் ரடாடியா மற்றும் 4 பேர் சேர்ந்து முகேஷ் வனியாவை பிடித்தனர்.

பின்னர் அவர்கள், கணவன்-மனைவி இருவரும் திருட வந்ததாக நினைத்து முகேஷை கட்டி வைத்து கம்பால் சரமாரியாக அடித்தனர். இந்த காட்சிகளை அவர்கள் தங்கள் செல்போனில் பதிவும் செய்து கொண்டனர். இந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த முகேஷ், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து அவரது மனைவி ஜெயாபென் ராஜ்கோட் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெய்சுக் ரடாடியா உள்ளிட்ட 5 பேரையும் கைது செய்தனர்.

திருடன் என நினைத்து தலித் வாலிபரை அடித்துக்கொன்ற சம்பவம் ராஜ்கோட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
Tags:    

Similar News