செய்திகள்

குமாரசாமி பதவியேற்பு விழாவில் பினராயி விஜயன், ஸ்டாலின் பங்கேற்பு

Published On 2018-05-21 19:07 GMT   |   Update On 2018-05-21 19:07 GMT
கர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்கும் விழாவில் கேரள முதல்வர் பினராயி விஜயன், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரும் கலந்துகொள்ள இருக்கிறார். #Kumaraswamy #KarnatakaCM #MKStalin #PinarayiVijayan

புதுடெல்லி :

கர்நாடக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பே எடியூரப்பா தனது முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, காங்கிரஸ்- மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி சார்பில் ஆட்சி அமைக்க உள்ளது. ஆட்சியமைக்க உரிமை கோரி மதசார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமி கவர்னரை சந்தித்து பேசினார். அப்போது ஆட்சி அமைக்க வருமாறு கவர்னர் அழைப்பு விடுத்தார்.

அதன் அடிப்படையில் நாளை (23-ந்தேதி) கர்நாடக முதல்- மந்திரியாக குமாரசாமி பதவி ஏற்க உள்ளார். அவருடன் அமைச்சர்களும் பதவியேற்க உள்ளனர். இந்த பதவி ஏற்பு விழாவில் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் ஒத்த கருத்துடைய கட்சி தலைவர்கள் பங்கேற்பதற்கு அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. 



அந்த வகையில் கேரள முதல்வர் பினராயி விஜயன், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த அழைப்பை ஏற்று பினராயி விஜயனும், ஸ்டாலினும் நாளை பெங்களூரு சென்று பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க உள்ளனர். 

இதுதவிர காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஆந்திரப்பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ், நடிகர் கமல்ஹாசன் ஆகியோரும் பதவி ஏற்பு விழாவில் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்பட்டுள்ளது. #Kumaraswamy #KarnatakaCM #MKStalin #PinarayiVijayan
Tags:    

Similar News