செய்திகள்

கர்நாடகாவில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தி இருக்க வேண்டும் - டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி பேட்டி

Published On 2018-05-21 09:22 GMT   |   Update On 2018-05-21 09:22 GMT
கர்நாடகாவில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் அங்கு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தி இருக்க வேண்டும் என தேர்தல் ஆணைய முன்னாள் தலைமை கமிஷனர் குறிப்பிட்டுள்ளார்.#Krishnamurthy #Prezrule
ஐதராபாத்:

ஐதராபாத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தேர்தல் ஆணைய முன்னாள் தலைமை கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:-

கர்நாடகாவில் ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மை எந்த கட்சிக்கும் இல்லாத நிலையில் ஆளுனர் வஜுபாய் வாலா ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தியிருக்க வேண்டும். 3 மாதங்களுக்கு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்திவிட்டு, 3 மாதங்களுக்குள் பெரும்பான்மை நிரூபிக்க தவறினால் மீண்டும் சட்டசபை தேர்தலை நடத்தியிருக்க வேண்டும்.

ஜனாதிபதி ஆட்சியே அனைத்திற்கும் தீர்வு என நான் குறிப்பிடவில்லை ஆனால் இதன்மூலம் அதிகப்படியான பண விரயம், நேர விரயம், குதிரை பேரம் போன்றவை தவிர்க்கப்படும்.

முதலில் தேர்தல் முறையில் மிகப்பெரிய மாற்றம் தேவை, அதிக தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சிகள் ஆட்சியமைக்கும் முறையை மாற்ற வேண்டும். 33.33 சதவிகித வாக்குகள் பெறும் வேட்பாளரே வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட வேண்டும். யாராலும் 33.33 சதவிகித வாக்குகள் பெற இயலவில்லை என்றால் மீண்டும் அந்த தொகுதியில் தேர்தல் வைக்க வேண்டும்.

சில நாடுகளில் 50 சதவிகிதத்துக்கு கூடுதலாக 1 சதவிகித வாக்குகள் பெற்றிருந்தாலே வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுகின்றனர். நாம் முதலில் 33.33 சதவிகிதம் என்ற முறைக்கு மாறுவோம் பின்னர் படிப்படியாக 50 சதவிகிதம் என்ற இலக்கை நிர்ணயிக்கலாம்.

ஆட்சி அமைப்பதற்காக கட்சி மாற கூடாது என்ற கட்டுப்பாட்டு சட்டத்தினை அரசியல்வாதிகளுக்கு விதிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார். #Krishnamurthy #Prezrule
Tags:    

Similar News