செய்திகள்

எடியூரப்பா சந்திக்கும் 5-வது ஓட்டெடுப்பு சோதனை

Published On 2018-05-19 06:14 GMT   |   Update On 2018-05-19 06:14 GMT
கர்நாடக முதல் மந்திரி எடியூரப்பா 4 தடவை நம்பிக்கை ஓட்டெடுப்பை சந்தித்து 3 தடவை வெற்றி பெற்றார். இந்த நிலையில் 5-வது முறையாக சந்திக்க உள்ளார்.#KarnatakaElections2018 #yeddyurappa
கர்நாடகா முதல்-மந்திரி எடியூரப்பா இதற்கு முன்பு 4 தடவை நம்பிக்கை ஓட்டெடுப்பு சோதனையை சந்தித்துள்ளார். 2007-ம் ஆண்டு அவர் முதல் முதலாக நம்பிக்கை ஓட்டெடுப்பை சந்தித்தார். அப்போது கூட்டணியில் இருந்த மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் குமாரசாமி ஆதரவு கொடுக்க மறுத்ததால் 8 நாட்கள் மட்டுமே ஆட்சியில் இருந்த எடியூரப்பா ஆட்சியைப் பறிகொடுத்தார்.

2008-ம் ஆண்டு ஜூன் மாதம் எடியூரப்பா இரண்டாவது நம்பிக்கை ஓட்டெடுப்பை சந்தித்தார். அப்போது அவரது ஆட்சி நீடிக்க 3 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தேவைப்பட்டது. “ஆபரேஷன் கமலா” திட்டத்தின்படி எடியூரப்பா அந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில் மிக எளிதாக வெற்றி பெற்றார். 2010-ம் ஆண்டு அக்டோபர் மாதம் எடியூரப்பாவை மெஜாரிட்டியை நிரூபிக்கும்படி அப்போதைய (காங்கிரஸ்) கவர்னர் பரத்வாஜ் உத்தரவிட்டார். 18 பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் எடியூரப்பாவுக்கு கொடுக்கும் ஆதரவை வாபஸ் பெறுவதாக கூறியதைத் தொடர்ந்து இந்த நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிடப்பட்டது.

அப்போது, தற்போதைய தற்காலிக சபாநாயகர் போப்பையா தான் சபாநாயகராக இருந்தார். அவர் அதிரடியாக 11 பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள், 5 சுயேட்சை எம்.எல்.ஏ.க்களை தகுதி இழக்க செய்து உத்தரவிட்டார். பிறகு குரல் ஓட்டெடுப்பு மூலம் ஓட்டெடுப்பில் எடியூரப்பா வெற்றி பெற்றதாக அறிவித்தார். 2010-ம் ஆண்டு அக்டோபரில் மீண்டும் ஒரு தடவை நம்பிக்கை ஓட்டெடுப்பில் எடியூரப்பா வெற்றி பெற்றார்.

ஆக இதுவரை 4 தடவை நம்பிக்கை ஓட்டெடுப்பை சந்தித்த எடியூரப்பா 3 தடவை வெற்றி பெற்றார். ஒரே ஒரு தடவைதான் தோல்வி அடைந்தார். இந்த நிலையில் 5-வது தடவையான இன்று அவருக்கு வெற்றி கிடைக்குமா அல்லது தோல்வியைத் தழுவுவாரா என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.#KarnatakaElections2018 #yeddyurappa
Tags:    

Similar News