செய்திகள்

பெங்களூரு திரும்பிய காங்கிரஸ், மஜத எம்.எல்.ஏ.க்கள் - சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு

Published On 2018-05-18 22:39 GMT   |   Update On 2018-05-18 22:39 GMT
கர்நாடக சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்க இருப்பதால் ஐதராபாத் சென்ற காங்கிரஸ் மற்றும் மஜத எம்.எல்.ஏ.க்கள் பெங்களூரு நகருக்கு திரும்பினர். #KarnatakaCMRace

ஐதராபாத்:

கர்நாடகாவில் யாருக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில் எடியூரப்பா நேற்று முன்தினம் முதல்வராக பதவியேற்றார். 15 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர் உத்தரவிட்டார். 

இதற்கிடையே, எம்.எல்.ஏ.க்களை இழுத்து விடக்கூடாது என்பதற்காக மைசூரு சாலையில் உள்ள சொகுசு விடுதியில் காங்கிரஸ் மற்றும் மஜத எம்.எல்.ஏ.க்கள் தங்க வைக்கப்பட்டனர். எடியூரப்பா பதவியேற்ற நிலையில், விடுதிக்கு போடப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது. இதனால், பாஜகவினர் அவர்களை எளிதில் தொடர்பு கொள்ளவோ, அங்கிருந்து எம்.எல்.ஏ.க்கள் தப்பிக்கவோ வழி உள்ளது.

இதனால், எம்.எல்.ஏ.க்களை கேரளாவுக்கு இடம்மாற காங்கிரஸ், மஜத தலைமை திட்டமிட்டன. நேற்று முன்தினம் இரவு, தனியார் விமானம் மூலம் கொச்சி செல்ல ஏற்பாடுகள் நடந்தன. ஆனால், விமான போக்குவரத்து அமைச்சகம் அதற்கு முட்டுக்கட்டை போட்டது. இதனால், நேற்று காலை இரண்டு கட்சி எம்.எல்.ஏ.க்களும் ஐதராபாத்துக்கு பேருந்து மூலம் சென்றனர். அவர்கள் அங்குள்ள இரண்டு சொகுசு ஓட்டல்களில் தங்கவைக்கப்பட்டனர். விடுதியை சுற்றி பலத்த பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. 

சுப்ரீம் கோர்ட்டில் காங்கிரஸ் தொடர்ந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள் இன்று மாலை 4 மணிக்குள் கர்நாடக சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் எடியூரப்பாவுக்கு உத்தரவிட்டனர்.



இதையடுத்து நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்துகொள்வதற்காக ஐதராபாத் நகரில் உள்ள சொகுசு விடுதியில் தங்கியிருந்த காங்கிரஸ் மற்றும் மஜத எம்.எல்.ஏ.க்கள் இரவோடு இரவாக பெங்களூரு நகருக்கு திரும்பினர். குமாரசாமி தலைமையிலான மஜத எம்.எல்.ஏ.க்கள் விமானம் மூலம் பெங்களூரு நகருக்கு வந்தனர். #KarnatakaCMRace
Tags:    

Similar News