செய்திகள்

செல்போனில் பேசியவாறு கார் ஓட்டுவது குற்றம் அல்ல: கேரள ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு

Published On 2018-05-17 23:47 GMT   |   Update On 2018-05-17 23:47 GMT
பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தலோ அல்லது விபத்தை ஏற்படுத்தவோ இல்லாத பட்சத்தில், செல்போனில் பேசியவாறு கார் ஓட்டுவது குற்றமல்ல என கேரள ஐகோர்ட்டு நீதிபதிகள் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளனர். #Driving #Cellphone #KeralaHighCourt
கொச்சி:

போக்குவரத்து விதிமீறல்களால் நாள்தோறும் ஏராளமான விபத்துகள் நடைபெறுகின்றன. இதில் செல்போனில் பேசியவாறே வாகனம் ஓட்டுவதால் நிகழும் விபத்துகளும் அதிகம். எனவே செல்போன் பேசியவாறு வாகனம் ஓட்டுவது குற்றமாக கருதப்பட்டு, மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் தண்டனைகள் வழங்கப்படுகின்றன.



கேரள மாநிலத்திலும், ‘கேரள போலீஸ் சட்டம்’ 118 (இ) பிரிவின்படி பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் வாகனம் ஓட்டுவது தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படுகிறது. இதில் 3 ஆண்டு சிறை அல்லது ரூ.10 ஆயிரம் அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.அங்குள்ள காக்கநாட்டை சேர்ந்த சந்தோஷ் என்பவர் செல்போனில் பேசியவாறு கார் ஓட்டி போலீசாரிடம் பிடிபட்டார். அவர் மீது கேரள போலீஸ் சட்டம் 118 (இ)-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டின் ஒரு நீதிபதி அமர்வு, செல்போனில் பேசியவாறு கார் ஓட்டுவது தண்டனைக்குரிய குற்றம் என கடந்த 2014-ம் ஆண்டு அறிவித்தார்.

இதை எதிர்த்து 2 நீதிபதிகள் அமர்வில் அவர் மேல்முறையீடு செய்தார். இதை விசாரித்த நீதிபதிகள் ஏ.எம்.ஷபிக், பி.சோமராஜன் ஆகியோரை கொண்ட அமர்வு, செல்போனில் பேசியவாறு வாகனம் ஓட்டுவது தண்டனைக்குரிய குற்றமல்ல எனக்கூறி ஒரு நீதிபதி அமர்வின் தீர்ப்பை ரத்து செய்தனர்.

பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தலோ அல்லது விபத்தை ஏற்படுத்தவோ இல்லாத பட்சத்தில், செல்போனில் பேசியவாறு கார் ஓட்டுவது குற்றமல்ல என நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறினர். இது கேரள போலீஸ் சட்டம் 118 (இ)-ன் கீழ் வராது என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.  #Driving #Cellphone #KeralaHighCourt
Tags:    

Similar News