செய்திகள்
அருண் ஜெட்லிக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நிறைவடைந்தது - ராகுல் காந்தி வாழ்த்து
மத்திய நிதிமந்திரி அருண் ஜெட்லிக்கு நடைபெற்ற சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்ததையடுத்து அவர் விரைவில் குணமடைய ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். #ArunJaitley #JaitleyTransplant #RahulGandhi
புதுடெல்லி :
மத்திய நிதிமந்திரி அருண் ஜெட்லி கடந்த சில மாதங்களாகவே சிறுநீரக பாதிப்பால் அவதியுற்று வந்தார். இதற்காக, கடந்த ஒருமாத காலமாக அவர் டயாலிசிஸ் சிகிச்சை பெற்றுவந்தார். இதன் காரணமாக வீட்டில் ஓய்வெடுத்தபடியே நிதியமைச்சக விவகாரங்களை அவர் கவனித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். இன்று காலை 8 மணி முதல் அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. அவருக்கு, எய்ம்ஸ் இயக்குனர் ரந்தீப் குலரியாவின் சகோதரரும், அப்பல்லோ ஆஸ்பத்திரியின் சிறுநீரகவியல் மருத்துவருமான சந்தீப் குலரியா சிறுநீரகம் மாற்று அறுவை சிகிச்சை செய்தனர்.
இந்நிலையில், அருண் ஜெட்லிக்கு நடைபெற்ற சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து அருண் ஜெட்லி விரைவில் குணமடைய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பதிவு செய்துள்ள வாழ்த்து செய்தியில், இன்று எய்ம்ஸ் மருத்துவமனையில் அருண் ஜெட்லி அவர்களுக்கு நடைபெற்ற சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்த செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன். அவர் விரைவில் குணமடைய எனது வாழ்த்துக்கள், என கூறியுள்ளார். #ArunJaitley #JaitleyTransplant #RahulGandhi