செய்திகள்

தேர்தல் மை காயாத நிலையில் மின்கட்டணத்தை உயர்த்தி ஷாக் கொடுத்த கர்நாடக மின் வாரியம்

Published On 2018-05-14 11:56 GMT   |   Update On 2018-05-14 11:56 GMT
கர்நாடகா சட்டசபை தேர்தல் நடந்து முடிந்த இரண்டு நாட்களில் மின்சார கட்டணத்தை உயர்த்தி மக்களுக்கு அம்மாநில மின்சார வாரியம் அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது. #KarnatakaPowerTariffHiked #KarnatakaElectricityRegulatoryCommission
பெங்களூரு:

கர்நாடகாவில் நேற்று முன்தினம் சட்டசபை தேர்தல் நடந்தது. பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட உள்ளன. இந்நிலையில், வாக்காளர்களின் கை விரலில் உள்ள மை காயாத நிலையில், மின்சார கட்டணத்தை உயர்த்தி அம்மாநில மின்சார வாரியம் அதிர்ச்சி கொடுத்துள்ளது.

கர்நாடக மாநிலம் மின்சார வாரிய தலைவர் எம்.கே சங்கரலிங்கே கவுடா இன்று பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்தார். மாநில மின்சார முதலீட்டாளர்கள் மற்றும் நுகர்வோர்களுடன் நடத்திய ஆலோசனைக்கு பிறகு மின்சார கட்டணத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

மின்சாரம் வழங்கும் நிறுவனங்கள் மற்றும் பங்கீட்டாளர்கள், ஒரு யூனிட்டுக்கு 83 பைசா முதல் 1.10 பைசா வரை உயர்த்த கோரிக்கை வைத்தனர். ஆனால், இறுதியாக மாநில மின்சார வாரியம் 20 பைசா முதல் 60 பைசா வரை மின்சார கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ளதாக அவர் கூறினார்.

கர்நாடகா மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும் மே மற்றும் ஏப்ரல் மாதத்தில் மின்சார கட்டணம் மாற்றி அமைக்கப்படும். இந்த வருடம் சட்டசபை தேர்தல் நடைபெற்றதால், மாநில அரசின் கோரிக்கையை ஏற்று கட்டண உயர்வு தள்ளிவைக்கப்பட்டது. இந்த புதிய மின்சார கட்டணம் ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். #KarnatakaPowerTariffHiked #KarnatakaElectricityRegulatoryCommission
Tags:    

Similar News