செய்திகள்

வன்கொடுமை தடுப்பு சட்டம் தொடர்பான சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு- அவசர சட்டம் கொண்டு வர மத்திய அரசு திட்டம்

Published On 2018-05-14 03:00 GMT   |   Update On 2018-05-14 03:00 GMT
எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை தடுப்பு சட்டம் தொடர்பான சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை வீழ்த்தும் வகையில் அவசர சட்டம் ஒன்றை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. #SupremeCourt #CentralGovt
புதுடெல்லி:

எஸ்.சி. மற்றும் எஸ்.டி. இனத்தவர் (தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி இன மக்கள்) மீதான வன்கொடுமை தடுப்பு சட்ட நடைமுறைகள் தொடர்பாக தொடுக்கப்பட்ட ஒரு வழக்கை சுப்ரீம் கோர்ட்டு விசாரித்து கடந்த மார்ச் மாதம் 20-ந் தேதி தீர்ப்பு வழங்கியது.

அதில், எஸ்.சி. மற்றும் எஸ்.டி. இனத்தவர் மீதான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ், அரசு ஊழியர்களை உடனடியாக கைது செய்வதற்கு தடை விதிக்கப்பட்டது. இத்தகைய வழக்குகளில் அரசு ஊழியர்களை கைது செய்யும்முன் துணை போலீஸ் சூப்பிரண்டு அந்தஸ்துக்கு குறைவு இல்லாத அதிகாரி கண்டிப்பாக முதல் கட்ட விசாரணை நடத்த வேண்டும் என்று கூறப்பட்டது. ஒன்றும் அறியாத அப்பாவி மக்களை பாதுகாப்பதற்காகத்தான் இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுவதாகவும் அதில் விளக்கம் தரப்பட்டது.

இருப்பினும் இந்த தீர்ப்பால், நாடு முழுவதும் சர்ச்சை எழுந்தது. எஸ்.சி., எஸ்.டி. இன மக்கள் மீதான வன்கொடுமை தடுப்பு சட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் ஒரு முயற்சி இது என்ற குற்றச்சாட்டை அரசியல் கட்சிகளும், தலித் அமைப்புகளும் கூறின.

இது தொடர்பாக வட மாநிலங்களில் நடந்த போராட்டங்களில் வன்முறை மூண்டது. அதில் 10-க்கும் மேற்பட்டோர் பலி ஆகினர்.

சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பில் மத்திய அரசு மறு ஆய்வு மனுதாக்கல் செய்து உள்ளது. இருப்பினும் தனது முந்தைய தீர்ப்புக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்து விட்டது.

இந்த விவகாரத்தில் மத்திய அரசின் மறு ஆய்வு மனு மீது நாளை மறுதினம் (16-ந் தேதி) விசாரணை நடக்க உள்ளது.

இதற்கு இடையே மத்திய அரசு இந்த விவகாரத்தில் அவசர சட்டம் இயற்ற திட்டமிட்டு உள்ளது. மேலும், வரும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின்போது, இதற்கான மசோதா கொண்டு வந்து நிறைவேற்றவும், அதை அரசியல் சாசனத்தின் 9-வது அட்டவணையில் சேர்க்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

அப்படி அரசியல் சாசனத்தின் ஒரு அங்கமாக இதை சேர்த்து விட்டால், இது தொடர்பாக எந்த கோர்ட்டும் பரிசீலிக்கவோ, தலையிடவோ முடியாது.

இது தொடர்பாக மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

எஸ்.சி. மற்றும் எஸ்.டி. இனத்தவர் மீதான வன்கொடுமை தடுப்பு சட்டத்தை மீண்டும் நீர்த்துப்போக விடாமல் தடுப்பதற்கு நிரந்தர ஏற்பாடாக இந்த மசோதா அமையும். சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை வீழ்த்துவதற்கு அவசர சட்டம் இடைக்கால ஏற்பாடாக அமையும்.

அவசர சட்டம் இயற்றி நடைமுறைப்படுத்திவிட்டால், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு வீழ்த்தப்பட்டு விடும்.

இவ்வாறு அவர் கூறினார். #SupremeCourt #CentralGovt
Tags:    

Similar News