2 வாக்காளர் அட்டை வச்சிருக்கீங்க.. பவன் கேராவுக்கு பறந்த நோட்டீஸ்.. ஸ்ட்ரிக்ட் காட்டிய தேர்தல் ஆணையம்
- மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951, பிரிவு 62, துணைப்பிரிவு 2 இன் படி ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட சட்டமன்றத் தொகுதிகளில் வாக்களிக்க முடியாது.
- வாக்கு திருட்டு குறித்து பேசி வந்த பவன் கேரா தான் உண்மையான திருடன் என பாஜக விமர்சித்துள்ளது.
காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளர் பவன் கேரா 2 வாக்காளர் அட்டை வைத்திருப்பதாக குற்றம்சாட்டி தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951, பிரிவு 62, துணைப்பிரிவு 2 இன் படி ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட சட்டமன்றத் தொகுதிகளில் வாக்களிக்க முடியாது. எனவே இது குறித்து தேர்தல் ஆணையம் கேராவிடம் பதில் கோரியுள்ளது.
"கேராவிடம் இரண்டு வாக்காளர் அடையாள அட்டைகள் உள்ளன. ஒன்றில் XHC1992338 என்ற எண் உள்ளது, இது ஜங்புரா சட்டமன்றத் தொகுதி 41 ஐச் சேர்ந்தது. மற்றொன்றின் EPIC எண் SJE0755967 ஆகும், இது புது டெல்லி சட்டமன்றத் தொகுதி 40 ஐச் சேர்ந்தது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இதுபோல தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்புவது இது முதல் முறை அல்ல. தேஜஸ்வி யாதவ், விஜய் குமார் சின்ஹா, ரேணு தேவி போன்ற தலைவர்களும் தலா இரண்டு வாக்காளர் அடையாள அட்டைகளை வைத்திருப்பதாக தேர்தல் ஆணையம் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி பதில் கோரியுள்ளது.
வாக்காளர் பட்டியலில் தேர்தல் ஆணையம் தில்லு முல்லு செய்து பாஜகவை வெற்றி பெற வைப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில் அவர்களை குறிவைத்து தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி வருவதாக மற்றொரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதற்கிடையே வாக்கு திருட்டு குறித்து பேசி வந்த பவன் கேரா தான் உண்மையான திருடன் என பாஜக ஐடி தலைவர் அமித் மாளவியா விமர்சித்துள்ளார்.