செய்திகள்

சூலூர் தொகுதியில் எடப்பாடி பழனிசாமி நாளை பிரசாரம்

Published On 2019-04-30 05:51 GMT   |   Update On 2019-04-30 05:51 GMT
அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சூலூர் தொகுதியில் நாளை பிரசாரம் செய்கிறார். #TNByPoll #ADMK #EdappadiPalaniswami
கோவை:

சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு வருகிற 19-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனுதாக்கல் நேற்று மாலையுடன் முடிவடைந்தது.

சூலூர் தொகுதியில் 48 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடக்கிறது. வேட்பு மனுக்கள் வாபஸ் வாங்க நாளை மறுநாள் (வியாழக்கிழமை) கடைசி நாளாகும். தேர்தலுக்கு இன்னும் 19 நாட்களே உள்ளதால் அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் பிரசாரத்தில் குதித்துள்ளனர். இதனால் தேர்தல் களம் களைகட்டியுள்ளது.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சூலூர் தொகுதியில் நாளை(1-ந்தேதி) பிரசாரம் செய்கிறார். திறந்தவேனில் நின்று அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவு திரட்டுகிறார். இதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் மூலம் நாளை மதியம் கோவை வருகிறார். பின்னர் மாலை 5 மணிக்கு சுல்தான்பேட்டை ஒன்றியம் ஜல்லிப்பட்டியில் தனது பிரசாரத்தை தொடங்குகிறார்.

தொடர்ந்து செஞ்சேரி மலை, சுல்தான்பேட்டை, செலக்கரிச்சல், பாப்பம்பட்டி, பாப்பம்பட்டி பிரிவு ஆகிய 6 இடங்களில் பிரசாரம் செய்கிறார். பின்னர் பிரசாரத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்புகிறார். மீண்டும் வருகிற 14-ந்தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சூலூர் தொகுதியில் 2-வது கட்டமாக பிரசாரம் செய்கிறார்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வருகிற 5, 6-ந்தேதிகளில் சூலூர் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் பொங்கலூர் பழனிசாமியை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். இதேபோல் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அ.தி.மு.க., தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்கள் பிரசாரம் செய்கிறார்கள்.

சூலூர் தொகுதியில் வெளிமாவட்டத்தை சேர்ந்த கட்சி நிர்வாகிகளும் தீவிர பிரசாரத்தில் இறங்கியுள்ளனர். இதனால் சூலூர் பகுதியில் தேர்தல் களைகட்டியுள்ளது. #TNByPoll #ADMK #EdappadiPalaniswami
Tags:    

Similar News