செய்திகள்

தமிழக வேட்பாளர்களில் 13 சதவீதம் பேர் மீது கிரிமினல் குற்ற வழக்குகள்

Published On 2019-04-15 07:58 GMT   |   Update On 2019-04-15 07:58 GMT
தமிழ்நாட்டில் நடைபெறும் தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ள தகவல்களின்படி அவர்களில் 13 சதவீதம் பேர் மீது கிரிமினல் வழக்குகள் இருப்பதாக தெரிய வந்துள்ளது. #Loksabhaelections2019
சென்னை:

தமிழ்நாட்டில் பாராளுமன்ற, சட்டசபை இடைத்தேர்தல்களில் மொத்தம் 845 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.

இவர்களில் 802 வேட்பாளர்களின் வேட்புமனுக்களை ஜனநாயக சீர்திருத்தக் கழகம் ஆய்வு செய்தது. அதில் கிடைத்த தகவல்கள் நேற்று வெளியிடப்பட்டன.

ஒவ்வொரு வேட்பாளரும் தங்களது வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ள தகவல்களின்படி பார்த்தால் மொத்த வேட்பாளர்களில் 13 சதவீதம் பேர் கிரிமினல் குற்ற வழக்குகள் பின்னணியுடன் இருப்பது தெரிய வந்துள்ளது. 67 வேட்பாளர்கள் மீது மிகக் கடுமையான குற்ற வழக்குகள் உள்ளன. திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் ஈஸ்வரன் மீது அதிகபட்சமாக 14 கிரிமினல் குற்ற வழக்குகள் உள்ளன.



தர்மபுரி பா.ம.க. வேட்பாளர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் மீது 12 வழக்குகள் இருக்கின்றன. மொத்த வேட்பாளர்களில் 50 சதவீதம் பேர் பட்டப்படிப்பு படித்துள்ளனர். மொத்த வேட்பாளர்களில் பெண் வேட்பாளர்கள் வெறும் 8 சதவீதம்தான். 54 வயதுக்குட்பட்ட இளம் வாக்காளர்கள் 38 சதவீதம் பேர் உள்ளனர்.

வேட்பாளர்களில் 23 சதவீதம் பேர் அதாவது 184 பேர் கோடீசுவரர்கள். நாகர்கோவில் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் எச்.வசந்தகுமார் முதல் இடத்தில் இருக்கிறார். அவரது மொத்த சொத்து மதிப்பு ரூ.417 கோடியாகும்.

தென்சென்னை தொகுதியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் இசக்கி சுப்பையா ரூ.237 கோடி சொத்துக்களுடன் 2-வது இடத்தில் இருக்கிறார். வேலூர் தொகுதியில் நிற்கும் ஏ.சி.சண்முகத்துக்கு ரூ.125 கோடியும், அரக்கோணம் தொகுதியில் போட்டியிடும் ஜெகத்ரட்சகனுக்கு ரூ.114 கோடியும், பாரிவேந்தருக்கு ரூ.97 கோடியும் சொத்துக்கள் இருக்கிறது.

சாருபாலா தொண்டமான் ரூ.92 கோடி, கார்த்தி சிதம்பரம் ரூ.79 கோடி, சி.பி.ராதாகிருஷ்ணன் ரூ.67 கோடி, பி.முருகேசன் ரூ.64 கோடி, எல்.கே.சுதீஷ் ரூ.60 கோடி சொத்துக்களுடன் உள்ளனர். துரைமுருகனின் மகன் கதிர்ஆனந்த் ரூ.58 கோடி சொத்து வைத்துள்ளார். பொன்முடியின் மகன் கவுதம் சிகாமணி ரூ.47 கோடிக்கு சொத்துக்கள் வைத்துள்ளார்.

அ.தி.மு.க.வின் 22 வேட்பாளர்களும், பாரதிய ஜனதாவின் 5 வேட்பாளர்களும், தே.மு.தி.க.வின் 4 வேட்பாளர்களும் கோடீசுவரர்கள் ஆவார்கள். #Loksabhaelections2019
Tags:    

Similar News