செய்திகள்

பாஜக ஆட்சியில் தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய வளர்ச்சி நிதி கிடைக்கவில்லை - தினகரன்

Published On 2019-04-08 06:13 GMT   |   Update On 2019-04-08 06:13 GMT
பாஜக ஆட்சியில் தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய வளர்ச்சி நிதி கிடைக்கவில்லை என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார். #BJP #TTVDhinakaran

நெல்லை:

தமிழகம் முழுவதும் அ.ம.மு.க. துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் அ.ம.மு.க. வேட்பாளர்களுக்கு தீவிர பிரசாரம் செய்து வருகிறார். நேற்று அவர் நெல்லை பாராளுமன்ற தொகுதி அ.ம.மு.க. வேட்பாளர் மைக்கேல் ராயப்பனை ஆதரித்து கீழப்பாவூர், ஆலங்குளம், பேட்டை, நெல்லை, மேலப்பாளையம், நாங்குநேரி, வள்ளியூர், பணகுடி பகுதியில் பிரசாரம் செய்தார்.

நெல்லை டவுனில் நடந்த கூட்டத்தில் டி.டி.வி. தினகரன் பேசும் போது கூறியதாவது:-

கடந்த 2014-ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஜெயலலிதாவுக்கு தான் மக்கள் வாக்களித்தனர். பா.ஜ.க.வுக்கு மக்கள் வாக்களிக்கவில்லை. அந்த கோபத்தில் மோடி தலைமையிலான மத்திய அரசு தமிழக மக்களை கடந்த 5 ஆண்டுகளாக வாட்டி வதைக்கிறது. மக்கள் மீது பல்வேறு வரி சுமைகளை ஏற்றியது.

தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய நலத்திட்டங்கள் கிடைக்கவில்லை. வளர்ச்சி திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கவில்லை. ஜெயலலிதாவுக்கு மக்கள் வாக்களித்த ஒரே காரணத்தால் மத்திய அரசு தமிழக மக்களை வஞ்சித்தது. அந்த அரசுடன் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு சமரசம் செய்துள்ளது.


மத்திய அரசின் கைப்பாவையாக தமிழக அரசு மாறிவிட்டது. ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்த மத்திய அரசுக்கு தமிழக அரசு ஆதரவு அளிப்பது எந்த விதத்தில் நியாயம். அதனால் தான் நாங்கள் அதை துரோகிகள் கூட்டணி என்று சொல்கிறோம். இந்த தேர்தலில் துரோகிகளின் கூட்டணிக்கு பாடம் புகட்ட வேண்டும். அதற்கு நீங்கள் எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

தி.மு.க. தலைமையிலான கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி. அவர்கள் ஏற்கனவே ஐக்கிய முற்போக்கு கூட்டணி, தேசிய முற்போக்கு கூட்டணிகளில் இடம் பெற்றிருந்தனர். அதாவது, காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியிலும் இடம் பெற்றிருந்தனர். பா.ஜ.க. கூட்டணியிலும் இடம் பெற்றிருந்தனர். அதனால் தான் நாங்கள் அந்த கூட்டணியை சந்தர்ப்பவாத கூட்டணி என்கிறோம். எங்கள் கட்சி ஒருபோதும் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்காது. இதேபோல் மு.க.ஸ்டாலின் சொல்வாரா? அவர் சொல்லமாட்டார். ஏனென்றால், தி.மு.க. பதவி, ஆட்சி அதிகாரத்திற்காக எதை வேண்டுமானாலும் செய்வார்கள். இந்த தேர்தலில் சந்தர்ப்பவாத கூட்டணிக்கும் பாடம் புகட்ட வேண்டும்.

பா.ஜ.க. மதத்தின் பெயரால் நாட்டை பிரித்து ஆள நினைக்கிறார்கள். அமைதி பூங்காவான நமது நாட்டுக்கு மத சாயம் பூச முயற்சி செய்கிறார்கள். நாங்கள் இதனை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். சிறுபான்மை மக்களுக்கு பாதுகாவலாக இருப்போம்.

இவ்வாறு அவர் பேசினார்.  #BJP #TTVDhinakaran

Tags:    

Similar News