செய்திகள்

சர்கார் படத்தை முன்வைத்து கள்ள ஓட்டு பற்றிய விழிப்புணர்வு பிரசாரம்

Published On 2019-03-29 05:37 GMT   |   Update On 2019-03-29 05:37 GMT
நடைபெற இருக்கும் பாராளுமன்றத் தேர்தலுக்காக சர்கார் பட கதையை முன்வைத்து ‘49பி’ குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது தேர்தல் ஆணையம். #49P #Sarkar #LokSabhaElections2019 #ElectionCommission
சென்னை:

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் வெளியான படம் ‘சர்கார்’.

அமெரிக்காவில் இருக்கும் விஜய் தேர்தலில் தன் வாக்கை செலுத்துவதற்காக இந்தியா வருவார். ஆனால் அவருடைய வாக்கை வேறு ஒருவர் செலுத்திவிட இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ‘49 பி’ பிரிவைப் பயன்படுத்தி, தன் வாக்குரிமையைப் பெறுவார். பெரும்பாலானவர்களால் அறியப்படாத இந்த சட்டப்பிரிவு ‘சர்கார்’ படத்துக்கு பிறகு பரவலாக தெரியவந்தது. ‘நோட்டா’ வின் சட்டப்பிரிவான ‘49 ஓ’ போல, ‘49 பி’யும் மக்கள் கவனத்துக்கு வந்தது.

நடைபெற இருக்கும் பாராளுமன்றத் தேர்தலுக்காக சர்கார் பட கதையை முன்வைத்து ‘49பி’ குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது தேர்தல் ஆணையம். இந்த சட்டப்பிரிவு குறித்த சுவரொட்டி மூலம் இந்த விழிப்புணர்வுப் பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறது.

அதில், ‘உங்கள் வாக்கினை வேறு எவரும் பதிவு செய்துவிட்டால் கவலை வேண்டாம் 49பி பிரிவை பயன்படுத்தி தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு ஆவணத்தை சமர்ப்பித்து வாக்குச் சீட்டின் மூலம் வாக்களிக்கலாம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து ஏ.ஆர்.முருகதாஸ், “மகிழ்ச்சி, தேர்தல் ஆணையம் ‘49 பி’ குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது” என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கும் இது தொடர்பான அறிவுரைகளை தேர்தல் ஆணையம் வழங்கி உள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

ஒருவர் தன்னுடைய வாக்கை செலுத்த வரும் போது அவர் வாக்கு ஏற்கனவே செலுத்தப்பட்டு விட்டதாக தெரிந்தால் முதலில் அவருடைய அடையாள ஆவணங்களை சரிபார்க்க வேண்டும். அதன் பின்னர் அவரிடம் இருந்து 2 ரூபாயை கட்டணமாக பெற்றுக்கொண்டு அவர் கூறுவது உண்மையா என்று விசாரணை நடத்த வேண்டும்.

விசாரணையில் அவர் வாக்கு கள்ள வாக்காக பதியப்பட்டு இருந்தால் அவரை வாக்களிக்க அனுமதிக்க வேண்டும். அவர் கூறியது பொய் என்று தெரிந்தால் அவரது 2 ரூபாய் கட்டணத்தை திருப்பி அளித்துவிட்டு அவரை போலீசில் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு வாக்களிக்கும்போது அந்த வாக்கு தனியாக வாக்கு சீட்டில் தான் பதியப்பட வேண்டும். வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவு செய்ய அனுமதிக்க கூடாது.’

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #49P #Sarkar #LokSabhaElections2019 #ElectionCommission
Tags:    

Similar News