செய்திகள்

முகிலன் உயிருக்கு ஏதாவது நேர்ந்தால் ஸ்டெர்லைட் நிர்வாகமே பொறுப்பு- மன்சூர்அலிகான் பேட்டி

Published On 2019-03-22 10:06 GMT   |   Update On 2019-03-22 10:06 GMT
சமூக செயற்பாட்டாளர் முகிலன் உயிருக்கு ஏதாவது நேர்ந்தால் ஸ்டெர்லைட் நிர்வாகம் தான் பொறுப்பு என்று நடிகர் மன்சூர்அலிகான் கூறியுள்ளார். #mansooralikhan #mukilan #sterliteplant

திண்டுக்கல்:

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் நாம்தமிழர் கட்சி வேட்பாளராக நடிகர் மன்சூர்அலிகான் போட்டியிடுகிறார். இவர் இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்த பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மத்தியில் ஆட்சிமாற்றம் வேண்டும் என்பதே நாடு முழுவதும் எதிரொலிக்கும் குரலாக உள்ளது. இதனால் மத்திய அரசுக்கு ஆதரவு அளிக்கும் கட்சிகளுக்கும் தோல்வியே கிடைக்கும். தற்போது மத்திய அரசை குறைகூறும் காங்கிரஸ் அரசும் ஆள்வதற்கு தகுதியற்ற அரசுதான்.

தமிழகத்தில் சீமான் தலைமையிலான எங்களது அணிக்கு இளைஞர்களின் ஆதரவு பெருகி வருகிறது. மாற்றத்தை எங்களிடம் இருந்து கொண்டு வர முயற்சி எடுத்து வருகிறோம். கார்ப்பரேட் நிறுவனங்களை தமிழகத்தில் காலூன்ற வைத்து நீராதாரத்தை மத்திய- மாநில அரசுகள் அழித்துவிட்டன. இதனால் விவசாயத்துக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு அவர்கள் போராட வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.

ஸ்டெர்லைட் ஆலை உள்பட தமிழக மக்களின் ஜீவாதார பிரச்சினைகளுக்காக போராடி வந்தவர் முகிலன். தற்போது அவரை காணவில்லை. உயிரோடு உள்ளாரா? என்று கூட தெரியவில்லை. தொழில் நுட்பவசதி பெருகி உள்ள இந்த காலகட்டத்தில் மாயமான ஒருவரை கண்டுபிடிப்பது எளிதான காரியம்தான்.


ஆனால் போலீசார் அக்கறை காட்டாமல் உள்ளனர். அவரை ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்தினர் கடத்தி கொலை செய்து இருக்கலாமோ? என்ற சந்தேகம் எழுந்து உள்ளது. அவரது உயிருக்கு ஏதாவது நேர்ந்தால் ஸ்டெர்லைட் நிர்வாகம்தான் பொறுப்பு. எனவே போலீசார் இந்த பிரச்சினையில் உரிய நடவடிக்கை எடுத்து உண்மையை வெளிக்கொண்டு வரவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.  #mansooralikhan #mukilan #sterliteplant

Tags:    

Similar News