செய்திகள்

விஜயகாந்துடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திடீர் சந்திப்பு

Published On 2019-03-16 06:16 GMT   |   Update On 2019-03-16 07:24 GMT
அதிமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீடு இன்னும் முடிவடையாத நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்து பேசினார். #ParliamentElections #VijayakanthEPS
சென்னை:

பாராளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக இடம்பெற்றுள்ளது. நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அ.தி.மு.க. கூட்டணியில் பிற கட்சிகளுக்கான தொகுதி பங்கீடும் சுமுகமாக முடிவடைந்துள்ளது. இதனையடுத்து எந்த கட்சிக்கு எந்தெந்த தொகுதிகள் என்ற பட்டியல் நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், தமிழக முதலமைச்சரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்தார். சாலி கிராமத்தில் உள்ள விஜயகாந்தின் வீட்டில் இந்த சந்திப்பு நடைபெற்றது. அப்போது விஜயகாந்துக்கு பொன்னாடை போர்த்தியும், மலர்ச்செண்டு கொடுத்தும் நலம் விசாரித்தார் முதல்வர்.



உடல்நலம் குறித்து விசாரித்த முதல்வருக்கு விஜயகாந்த் பொன்னாடை அணிவித்தார். பின்னர் இருவரும் தேர்தல் பணிகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பேசினர். இந்த சந்திப்பின்போது அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், கடம்பூர்  ராஜூ உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

பாராளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் இன்னும் இரண்டு நாட்களில் வெளியாகும் என  எதிர்பார்க்கப்படுகிறது. #ParliamentElections #VijayakanthEPS

Tags:    

Similar News