முட்புதரில் காயங்களுடன் கிடந்த பிரபாகரன்.
ரெயிலில் இருந்து தவறி முட்புதரில் விழுந்து விடிய, விடிய உயிருக்கு போராடிய வாலிபர்
- பிரபாகரன் சென்னைக்கு வேலை தேடி வர முயன்றார்.
- பிரபாகரனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மதுரை :
மதுரை கரும்பாலை பகுதியை சேர்ந்தவர் பாக்கியம். இவருடைய மகன் பிரபாகரன் (வயது 17). இவர் 8-ம் வகுப்பு வரை படித்துள்ளார். இந்நிலையில் பிரபாகரன் சென்னைக்கு வேலை தேடி வர முயன்றார். அதற்காக பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறி வந்துள்ளார்.
சோழவந்தான் அருகே நெடுங்குளம் ரெயில்வே கேட் பகுதியில் வந்தபோது, ரெயிலில் இருந்து எதிர்பாராதவிதமாக அவர் தவறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. ஓடும் ரெயிலில் இருந்து விழுந்ததாலும், முட்கள் குத்தியதாலும் படுகாயம் அடைந்தார்.
மேலும் அவரால் எழுந்திருக்க முடியாததால் விடிய, விடிய பலத்த காயத்துடன் பிரபாகரன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதற்கிடையே அவருடைய பெற்றோர் பிரபாகரனை செல்போனில் தொடர்பு கொண்டபோது, செல்போன் அழைப்பை அவர் எடுக்கவில்லை. இதனால் பிரபாகரன் உடன் சென்ற நண்பர்களை போனில் தொடர்பு கொண்டு பிரபாகரன் எங்கே? என்று கேட்டுள்ளனர்.
அதற்கு அவர்கள் மதுரையில் இருந்து எங்களோடு வந்த பிரபாகரனை சோழவந்தான் பகுதியில் இருந்து திடீரென காணவில்லை என்று கூறியுள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோரும், உறவினர்களும் துரிதமாக செயல்பட்டு, அப்பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளம் பகுதியில் தேடி சென்றனர்.
இதற்கிடையே நெடுங்குளம் ரெயில்வே கேட் அருகே முட்புதரில் இருந்து முனகல் சத்தம் கேட்டது.
அங்கு சென்று பார்த்தபோது, படுகாயங்களுடன் கிடந்த பிரபாகரனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள், அவரை உடனடியாக மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.