பெற்றோரை கொன்று ஜாமீனில் வெளியே வந்த வாலிபர் அக்கா வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை
- ஜாமீனில் வந்த கார்த்தி அந்தியூரை அடுத்துள்ள கோவிலூர் புங்கமேடு பகுதியில் தனது கணவருடன் வசித்து வரும் அக்காள் கலைச்செல்வி வீட்டில் தங்கி இருந்தார்.
- கலைச்செல்வி அருகில் இருந்தவர்களின் உதவியுடன் கார்த்தியை மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த கொளப்பலூர் மகாலட்சுமி நகரை சேர்ந்தவர் கார்த்தி (21). இவர் கடந்த 22-4-2023 அன்று தனது பெற்றோரை கொலை செய்து விட்டதாக தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் கடந்த 25 நாட்களுக்கு முன் ஜாமீனில் வந்த கார்த்தி அந்தியூரை அடுத்துள்ள கோவிலூர் புங்கமேடு பகுதியில் தனது கணவருடன் வசித்து வரும் அக்காள் கலைச்செல்வி வீட்டில் தங்கி இருந்தார்.
வீட்டு வந்த நாள் முதல் கார்த்தி பெற்றோரை தான் கொல்லவில்லை. என்மீது வீண் பழி சுமத்தி ஜெயிலுக்கு அனுப்பி விட்டனர் என புலம்பி தனக்கு வாழப் பிடிக்கவில்லை என கூறி வந்துள்ளார். அதற்கு அக்கா கலைச்செல்வி, கார்த்திக்கு ஆறுதல் கூறி வந்துள்ளார்.
இந்த நிலையில் கலைச்செல்வி தனது உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார். பின்னர் அவர் மாலையில் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டினுள் உள்ள விட்டத்தில் கார்த்தி தூக்கிட்டு தொங்கியுள்ளார்.
இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த கலைச்செல்வி அருகில் இருந்தவர்களின் உதவியுடன் கார்த்தியை மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே கார்த்தி இறந்து விட்டதாக கூறியுள்ளார்.
இதுகுறித்து வெள்ளித் திருப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.