உள்ளூர் செய்திகள்

ஏற்காட்டில் படகு இல்லத்தில் கூடிய சுற்றுலா பயணிகளை படத்தில் காணலாம்.

75-வது சுதந்திர தின விடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பால் ஏற்காடு ஸ்தம்பித்தது

Update: 2022-08-15 08:46 GMT
  • ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டில் தொடர் விடுமுறை காரணமாக ஏராளமான சுற்றுலா பயணிகள் திரண்டனர்.
  • இதனால் நெரிசலால் மலை பாதையில் வாகனங்கள் தேக்கம்

ஏற்காடு:

ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டில் தொடர் விடுமுறை காரணமாக ஏராளமான சுற்றுலா பயணிகள் திரண்டனர். இதனால் ஏற்காட்டில் உள்ள தங்கும் விடுதிகள் அனைத்தும் நிரம்பி காணப்படுகிறது.

இன்று 75-வது சுதந்திர தின விடுமுறையையொட்டி ஏற்காடுக்கு சுற்றுலா பயணிகள் அதிக எண்ணிக்கையில் படையெடுத்தனர். ஏற்காடு அண்ணா பூங்கா, ஏரி பூங்கா , சேர்வராயன் குகை கோவில், பக்கோடா பாயிண்ட் , லேடிஸ்சீட் , படகு இல்லம் போன்ற சுற்றுலா இடங்களில் சுற்றுலா பயணிகள் சுற்றி பார்த்து மகிழ்ந்தனர். படகு இல்லத்தில் கூட்டம் அதிகம் காணப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் வெகு நேரம் காத்திருந்து படகு சவாரி செய்தனர்.

ஏற்காட்டில் கடந்த 10 நாட்களாக கன மழை பெய்த நிலையில் நேற்று முன்தினம் முதல் மழை குறைந்து இதமான சூழல் நிலவுகிறது. இச்சூழலை சுற்றுலா பயணிகள் வெகுவாக ரசித்தனர்.

சுற்றுலா பயணிகள் வாகனங்கள் அதிகளவில் ஏற்காடு வருவதால் இன்று மலை பாதையில் வாகன நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக அதிகாலையில் இருந்தே இரு சக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் அணிவகுத்தப்படி சாரை, சாரையாக மலை பாதை வழியாக ஏற்காடுக்கு வந்தபடி இருந்தது. பொதுவாக சேலத்தில் இருந்து 45 நிமிடத்தில் ஏற்காடு வந்துவிடலாம். ஆனால் இன்று வாகன நெரிசலால் மலை பாதை வழியாக ஏற்காடு வர 2, 3 மணி நேரம் வரை ஆனது. இதனால் ஏற்காடு மலை பகுதி ஸ்தம்பித்து காணப்பட்டது.

சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பால் உள்ளூர் கடைக்காரர்கள், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News