உள்ளூர் செய்திகள்

துண்டு பிரசுரம் வினியோகித்த பெண்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

பிரதமருக்கு எதிராக துண்டு பிரசுரம் வினியோகித்த பெண்கள்; பா.ஜனதாவினர் திரண்டதால் பரபரப்பு

Published On 2023-02-28 08:06 GMT   |   Update On 2023-02-28 08:06 GMT
  • மத்திய அரசு அதிக வரி வசூல் செய்கிறது என்பது உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரம்.
  • 50-க்கும் மேற்பட்ட பா.ஜனதாவினர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நாகப்பட்டினம்:

டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு எதிராக பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வந்தவர் வழக்கறிஞர் நந்தினி.

அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக வழக்கறிஞர் நந்தினி மற்றும் நிரஞ்சனா ஆகியோர் தமிழகம் முழுவதும் பிரசாரம் மேற்கொண்டு வரும் நிலையில் நாகையில் துண்டு பிரசுரங்கள் விநியோகித்து பிரசாரம் செய்தனர்.

மத்திய அரசு அதிக வரி வசூல் செய்கிறது என்பது உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை நாகை புதிய, பழைய பஸ் நிலையங்கள் என பொதுமக்கள் கூடும் இடங்களில் விநியோகம் செய்துள்ளனர்.

தொடர்ந்து நாகை கடைத்தெருவில் இருவரும் துண்டு பிரசுரங்கள் விநியோகித்து கொண்டு இருப்பதை அறிந்த பா.ஜ.க.வினர் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் நகர பொறுப்பாளர் சுதாகர் கொடுத்த புகாரின்பேரில் நந்தினி மற்றும் நிரஞ்சனா ஆகியோரை இரவில் போலீஸ் நிலையம் அழைத்து வந்த இன்ஸ்பெக்டர் சுப்ரியா அவர்களிடம் சுமார் 3 மணி நேரம் விசாரணை நடத்தினார்.

அப்போது காவல் நிலையம் முன்பு 50 -க்கும் மேற்பட்ட பா.ஜ.கவினர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் பா.ஜ.க.வினரை சமாதானம் செய்து அப்புறப்படுத்திய போலீசார் நந்தினி மற்றும் நிரஞ்சனா ஆகியோரை காவல்துறை வாகனத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஏற்றி சென்று நாகை பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து மூலம் மதுரைக்கு அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News