சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.
குடிநீர் கேட்டு பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்
- ஒரு வாரத்திற்கு 5 குடம் தண்ணீர் மட்டுமே வழங்கப்படுவதாக அப்பகுதி பெண்கள் தெரிவித்தனர்.
- ஆத்திரம் அடைந்த அப்பகுதி பெண்கள் இன்று காலை காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தொப்பூர்,
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம் பாலஜங்கமனஹள்ளி பகுதியில் சுமார் 2000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு ஆழ்துளை கிணறுகள் மற்றும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட குடிநீர் சரிவர வழங்கவில்லை. இதனால் குடிநீர் கிடைக்காமல் மக்கள் தவித்து வந்தனர்.
மேலும் ஒரு வாரத்திற்கு 5 குடம் தண்ணீர் மட்டுமே வழங்கப்படுவதாக அப்பகுதி பெண்கள் தெரிவித்தனர். இதனால் காலை நேரங்களில் பணிக்கு செல்வோர் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகளுக்கு மிகவும் சிரமம் அடைந்தனர்.
இது குறித்து பால ஜங்கமனஹள்ளி ஊராட்சியில் அப்பகுதி பொதுமக்கள் புகார் கொடுத்தனர். ஆனால் இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பெண்கள் இன்று காலை காலி குடங்களுடன் நல்லம்பள்ளி செல்லும் சாலையில் அரசு பேருந்து மற்றும் வாகனங்களை சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த அதியமான் கோட்டை போலீசார் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பகுதிக்கு முறையாக குடிநீர் கிடைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். அதனால் பெண்கள் சாலை மறியல் கைவிட்டு கலைந்து சென்றனர்.