வரதட்சணை கொடுமையால் போலீஸ்காரர் மனைவி தற்கொலையா?- ஆர்.டி.ஓ. விசாரணை
- வினீத் பாலாஜிக்கும், முத்துபாண்டீஸ்வரிக்கும் கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டு வந்தது.
- முத்துபாண்டீஸ்வரின் தந்தை கார்த்திகைவேல் ஊட்டி ஜி1 போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
ஊட்டி:
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் வினீத் பாலாஜி (வயது 29). இவர் நீலகிரி மாவட்டம் ஊட்டி ஜி1 போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார்.
இவருக்கும் திண்டுக்கல் சீலப்பாடி, என்.ஜி.ஜி.ஓ. காலனியைச் சேர்ந்த முத்துபாண்டீஸ்வரி (25) என்பவருக்கும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பிறகு தம்பதியினர் ஊட்டியில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வந்தனர்.
வினீத் பாலாஜிக்கும், முத்துபாண்டீஸ்வரிக்கும் கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டு வந்தது. இந்தநிலையில் காவலர் குடியிருப்பில் முத்துபாண்டீஸ்வரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்த முத்துபாண்டீஸ்வரியின் குடும்பத்தினர் நேற்று ஊட்டிக்கு புறப்பட்டு வந்தனர். முத்துபாண்டீஸ்வரின் மரணத்துக்கு அவரது கணவரும், கணவரின் குடும்பத்தினருமே காரணம், எனவே அவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஊட்டி ஆர்.டி.ஓ. அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து பாண்டீஸ்வரின் தந்தை கார்த்திகைவேல் ஊட்டி ஜி1 போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-
எனது மகளின் திருமணத்தின்போது வரதட்சணையாக 18 பவுன் நகை மற்றும் ரூ.20 ஆயிரம் ரொக்கப்பணம் கொடுக்கப்பட்டது. ஆனால் கூடுதலாக பணம் மற்றும் இருசக்கர வாகனம் கேட்டு எனது மகளுக்கு அவரது கணவரும், குடும்பத்தினரும் கொடுமைப்படுத்தி வந்தனர்.
அந்த சமயம் எனது 2-வது மகளுக்கு திருமணம் ஏற்பாடுகள் செய்ததால் தற்போது பணம் இல்லை, திருமணம் முடிந்ததும் தருவதாக தெரிவித்தேன். அந்த கோபத்தில் 2-வது மகள் திருமணத்துக்கு அவர்கள் யாரும் வரவில்லை. எனது மகள் முத்துபாண்டீஸ்வரியை மட்டும் அனுப்பி வைத்தனர்.
முத்துபாண்டீஸ்வரி ஊட்டியில் இருந்தபடி எங்களிடம் அடிக்கடி பேசி வந்தார். ஒவ்வொரு முறை பேசும்போதும் தனது கணவர், மாமனார், மாமியார் ஆகியோர் தன்னை இழிவாகவும், கேவலமாகவும் பேசுவதாக தெரிவிப்பார். கணவர் அடித்து துன்புறுத்துவதாகவும் கூறினார். இதனால் வாழவே பிடிக்கவில்லை என கூறி கண்ணீர் விட்டு அழுவார். நாங்கள் அவளை சமாதானம் செய்து வந்தோம்.
கடைசியாக 6-ந் தேதி அவள் எங்களிடம் பேசினாள். 7-ந் தேதி மாலை ஊட்டி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இருந்து எங்களுக்கு போன் செய்து உங்கள் மகள் தற்கொலை செய்துகொண்டதாக தெரிவித்தனர்.
எனது மகள் மரணத்துக்கு அவரது கணவரும், மாமனார், மாமியாருமே காரணம். எனவே அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் புகாரில் கூறி இருந்தார்.
இந்த புகார் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருமணம் ஆகி ஒரு வருடத்துக்குள் முத்து பாண்டீஸ்வரி தற்கொலை செய்து கொண்டதால் அவரது மரணம் தொடர்பாக ஆர்.டி.ஓ. துரைசாமி விசாரணை நடத்தி வருகிறார். முத்துபாண்டீஸ்வரியின் உறவினர்கள் மற்றும் போலீஸ்காரர் வினீத் பாலாஜி, அவரது பெற்றோரிடம் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்த உள்ளார்.
விசாரணையில் வரதட்சணை கொடுமை நடந்தது உறுதியானால் வினீத் பாலாஜி மற்றும் அவரது பெற்றோர் மீது நடவடிக்கை பாயும் என போலீசார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் ஊட்டி பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.