உள்ளூர் செய்திகள்

நகை திருடியதாக பிடிபட்ட கவிதாவை படத்தில் காணலாம்.

கிருஷ்ணகிரியில் நகைக்கடைகளில் திருடி பிடிபட்ட பெண்

Published On 2022-12-17 10:06 GMT   |   Update On 2022-12-17 10:06 GMT
  • தங்க காசு ஒன்றை திருடி தனது கைப்பையில் ஒளித்து வைத்த காட்சி பதிவாகி இருந்தது.
  • அவரை கையும் களவுமாக பிடித்து ஊத்தங்கரை போலீசில் ஒப்படைத்தனர்.

கிருஷ்ணகிரி,

திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர் மன்சூர் அஹமது (வயது 36). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் நகை கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது நகை கடையில் தங்க நாணயம் ஒன்று மாயமானது.

இதேபோல அப்பகுதிகளில் உள்ள மேலும் சில கடைகளிலும் நகைகளை திருடு போனது. இது குறித்து நகை கடை உரிமையாளர்கள் தங்களுக்குள் பேசிக்கொ ண்டிருந்தனர்.

இந்நிலையில் மன்சூர் அஹமது நகை கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் ஒரு பெண் நகை வாங்குவது போல வந்து தங்க காசு ஒன்றை திருடி தனது கைப்பையில் ஒளித்து வைத்த காட்சி பதிவாகி இருந்தது. இந்த காட்சி நகைக்கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது.

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த மன்சூர் அஹமது கேமராவில் பதிவாகியிருந்த காட்சி மூலம் அப்பெண்ணை அடையாளம் கண்டு அவரது செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டுள்ளார். குறிப்பிட்ட ஒரு நகை கடையில் சலுகை விலையில் நகை விற்பனை நடைபெறுவதாக கூறி அவரை வர வைத்தார்.

இதையடுத்து அந்த பெண் குறிப்பிட்ட நகை கடைக்கு வந்தார். அப்போது அவரை கையும் களவுமாக பிடித்து ஊத்தங்கரை போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அந்த பெண்ணிடம் இருந்து திருட்டு நகைகளை பறிமுதல் செய்தனர்.

பின்னர் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஆம்பூர் வீராங்குப்பம் பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவரது மனைவி கவிதா (37) என்பது தெரிய வந்தது. அவர் இதேபோல பல்வேறு நகை கடைகளிலும் வாடிக்கையாளர் போல உள்ளே சென்று நகைகளை திருடி சென்றதை ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து கவிதாவை கைது செய்த போலீசார் அவரை கிருஷ்ணகிரி மகளிர் சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News