உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில், கட்சியின் 51-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் ஓசூரில் நடைபெற்றது. இதில் தம்பிதுரை எம்.பி.பேசியபோது எடுத்த படம்.

இரும்பு கோட்டையாக விளங்கும் அ.தி.மு.க.வை யாராலும் அழிக்க முடியாது -ஓசூர் பொதுக்கூட்டத்தில் தம்பிதுரை எம்.பி. பேச்சு

Published On 2022-10-22 14:59 IST   |   Update On 2022-10-22 14:59:00 IST
  • புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் நாம் தான் வெற்றி பெறுவோம்.
  • அதி.மு.க. இரும்பு கோட்டையாக விளங்கும் இந்த இயக்கத்தை யாராலும் அழிக்க முடியாது.

ஓசூர்,

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில், கட்சியின் 51-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் ஓசூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மேற்கு மாவட்ட அவைத்தலைவர் பெருமாள் தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ணைரெட்டி முன்னிலை வகித்தார். மாநகர கிழக்கு பகுதி செயலாளர் ராஜி வரவேற்றார்.

கொட்டும் மழையிலும் நடைபெற்ற இந்த கூட்டத்தில், கட்சியின் கொள்கை பரப்பு செயலாரும், முன்னாள் நாடாளுமன்ற துணை சபாநாயகருமான டாக்டர் மு.தம்பிதுரை எம்.பி.கலந்து கொண்டு பேசியதாவது:-

எம்.பி, மற்றும் முன்னாள் அமைச்சராகிய நான், கூட்டத்திற்கு பேச வரும் போதே கரண்ட் கட் ஆகி விட்டது. தி.மு.க. ஆட்சிக்கு வந்தாலே கரண்ட் இருக்காது. கரண்ட்டும் போய் விட்டது, தி.மு.க. ஆட்சியும் போகப்போகிறது என்பதைத்தான் இது உணர்த்துகிறது. ஆக, சக்தி இல்லாத கட்சியாக, ஆட்சியாக தி.மு.க. இருந்து வருகிறது. கட்சி தொடங்கி 51 ஆண்டுகளில் 30 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த மாபெரும் இயக்கம் தான் அதி.மு.க. இரும்பு கோட்டையாக விளங்கும் இந்த இயக்கத்தை யாராலும் அழிக்க முடியாது. நாற்பதும் நமதே என்று ஜெயலலிதா கூறியதை போல், வருகிற நாடாளுமன்ற தேர்தலில், தமிழ்நாட்டில் புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் நாம் தான் வெற்றி பெறுவோம்.

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட்டணிதான் அமோக வெற்றி பெறும். இந்த கிருஷ்ணகிரி தொகுதியிலும் அ.தி.மு.க.தான் வெற்றி பெறப்போகிறது. அதற்கான தேர்தல் பணிகள் இன்று முதல், இந்த ஓசூர் பொதுக்கூட்டத்தின் வாயிலாக தொடங்கி விட்டது.

ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகளாகி விட்டது. தேர்தலின்போது தந்த வாக்குறுதிகள் எதையும் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றவில்லை. நிலையில்லாத ஆட்சியாக தி.மு.க. உள்ளது. இப்போது அங்கு அதிகாரத்தில் உள்ளவர்கள் அனைவரும் அ.தி.மு.க.விலிருந்து சென்றவர்கள்தான்.அவர்களை வைத்துதான் ஸ்டாலின் ஆட்சி நடத்தி வருகிறார். அவர் உண்மையான ஆட்சி நடத்தவில்லை. மக்கள் அனைத்தையும் கவனித்துக்கொண்டுதான் உள்ளனர், தெளிவாகவும் உள்ளனர்.

கடந்த தேர்தலில் அ.தி.மு.க.வை வெற்றி பெறச் செய்து, எடப்பாடி பழனிசாமியையே மீண்டும் முதல்வராக்கி இருக்கலாம் என்ற உணர்வு மக்களிடம் மேலோங்கி நிற்கிறது. இது தான் உண்மையான நிலைமை.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் தலைமைக்கழக பேச்சாளர்கள் அன்புக்கரசன், இடிமுரசு ரவி உள்பட பலர் பேசினார்கள். மேலும் மேற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் சிட்டி ஜெகதீசன், அமைப்புசாரா ஓட்டுனர் சங்க மாவட்ட செயலாளர் சென்னகிருஷ்ணன், பகுதி செயலாளர்கள் அசோகா, வாசுதேவன், மஞ்சுநாத், மண்டல தலைவர் ஜெயப்பிரகாஷ், மாநகராட்சி கவுன்சிலர்கள், மேற்கு, கிழக்கு மாவட்டத்திற்குட்பட்ட ஒன்றிய செயலாளர்கள், மாவட்ட, மாநகர, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள், திரளாக கலந்து கொண்டனர் முடிவில், மேற்கு மாவட்ட துணைத்தலைவர் மதன் நன்றி கூறினார்.

தொடர்ந்து, தம்பிதுரை எம்.பி. பிரம்மாண்ட கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கினார்.

Tags:    

Similar News