உள்ளூர் செய்திகள்

நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதியில் காட்டு யானைகள் அட்டகாசம்

Published On 2023-10-12 14:47 IST   |   Update On 2023-10-12 14:47:00 IST
  • யானைகளை விரட்ட 4 கும்கிகள் வரவழைப்பு
  • டிரோன் மூலமாகவும் வனத்துறை தேடுதல் வேட்டை

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் உள்ள காட்டுப்பகுதிகளில் யானை, புலி, சிறுத்தை உள்பட எண்ணற்ற வனவிலங்குகள் உள்ளன. அவை உணவு மற்றும் தண்ணீர் தேடி அருகில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து அட்டகாசம் செய்வது தொடர்கதையாக நீடித்து வருகிறது.

நீலகிரி மாவட்டம் பந்தலூர் இரும்புபாலம் இன்கோ பள்ளம் பகுதியில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு நேற்று இரவு 2 காட்டு யானைகள் வந்தன. அவை அங்குள்ள தோட்டங்களில் புகுந்து அட்டகாசம் செய்தன. பிளிறல் சத்தம் கேட்டு திரண்டு வந்த பொதுமக்களையும் காட்டு யானைகள் ஆக்ரோசமாக விரட்டின. அதன்பிறகு அவை மீண்டும் வனப்பகுதிக்குள் திரும்பி சென்றுவிட்டன.

பந்தலூர் இரும்பு பாலம் பகுதியில் காட்டு யானைகள் அட்டகாசம் காரணமாக அங்கு வசிக்கும் பொதுமக்கள் வேலைக்கு செல்ல முடியாமலும், மாணவ-மாணவிகள் பள்ளி செல்ல முடியாமலும் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதற்கிடையே பந்தலூர் பகுதியில் காட்டு யானைகளின் அட்டகாசத்தை வனத்துறையினர் தடுத்து நிறுத்த வலியுறுத்தி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது காட்டு விலங்குகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதிஅளித்தனர். தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

இந்த நிலையில் பந்தலூா் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வரும் காட்டு யானைகளை வனத்துக்குள் விரட்டுவதற்காக முதுமலை புலிகள் காப்பக முகாமில் இருந்து வசீம், விஜய், பொம்மன், சீனிவாஸ் ஆகிய 4 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு உள்ளன. அவை பந்தலூர் பகுதியில் முகாமிட்டு கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன.

மேலும் வனத்துறையினர் ட்ரோன் காமிரா வழியா கவும் காட்டு யானைகளை கண்காணித்து வருகின்றனர்.

பந்தலூர் குடியிருப்பு பகுதிக்கு வரும் காட்டு யானைகளை கும்கிகள் உதவியுடன் நடுவழியில் தடுத்து நிறுத்தி மீண்டும் வனத்துக்குள் திருப்பி அனுப்பும் பணிகள் மும்முரம் அடைந்து உள்ளன. இதற்காக அங்கு வனத்துறை சார்பில் சிறப்பு குழுக்களும் அமைக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையே பொது மக்கள் வீட்டில் பாதுகாப்பாக இருக்க வேண்டும், யானைகளை விரட்டும் பணியில் யாரும் ஈடுபட கூடாது, ஏதேனும் தகவல் அறிந்தால் உடனடியாக வனத்துறைக்கு தெரிவிக்க வேண்டுமென காட்டு இலாகா அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இதற்காக தொலைபேசி எண்களும் தற்போது வெளியிடப்பட்டு உள்ளன.

Tags:    

Similar News