காட்டு யானைகள் கர்நாடக வனப்பகுதிக்கு விரட்டியடிப்பு
- 200-க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டு சுற்றித்திரிந்து வருகின்றன.
- யானைகளை வனத்துறையினர் கர்நாடக மாநில வனப்பகுதிக்கு விரட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி, ஜவளகிரி, தேன்கனிக்கோட்டை, நொகனூர் உள்ளிட்ட வனப்பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டு சுற்றித்திரிந்து வருகின்றன.
இந்த யானைகள் அவ்வப்போது கிராமப்பகுதிகளில் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி கிராம மக்களை அச்சுறுத்தி வந்தது. இந்த யானைகளை கர்நாடக வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும் என பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு நொகனூர் வனப்பகுதியில் சுற்றித்திரிந்த 70-க்கும் மேற்பட்ட யானைகளை வனத்துறையினர் கர்நாடக மாநிலத்திற்கு விரட்டினர்.
இந்த யானைகள் கூட்டத்தில் பிரிந்த 30 யானைகள் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள முள் பிளாட் என்ற இடத்தில் தஞ்சமடைந்தன. இந்த யானைகளை நேற்று முன்தினம் வனத்துறையினர் விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.
இதனால் யானைகள் அங்கிருந்து ஆலள்ளி வனப்பகுதிக்கு சென்று முகாமிட்டன. கர்நாடகாவுக்கு விரட்டப்பட்டன இந்த நிலையில் நேற்று தேன்கனிக்கோட்டை வனச்சரகர் முருகேசன் தலைமையில் வனவர்கள் காளியப்பன், வேணு மற்றும் வனக்காப்பாளர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் அடங்கிய 25-க்கும் மேற்பட்டோர் யானைகளை ஆலள்ளி பகுதியில் இருந்து பட்டாசுகள் வெடித்து கர்நாடக மாநில வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது யானைகள் மரக்கட்டா வனப்பகுதி வழியாக தேன்கனிக்கோட்டை அஞ்செட்டி சாலையை கடந்து சென்றன. யானைகள் பாதுகாப்பாக சாலையை கடக்க அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
யானைகள் சாலையை கடந்து சென்ற பின்னர் அப்பகுதியில் மீண்டும் போக்குவரத்து தொடங்கியது. இந்த யானைகளை வனத்துறையினர் கர்நாடக மாநில வனப்பகுதிக்கு விரட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இதனால் தேன்கனிக்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி பொதுமக்கள், விவசாயிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.