உள்ளூர் செய்திகள்

 தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளதால் வீராணம் ஏரி நீர்மட்டம் உயர்ந்து உள்ளது. அதனை படத்தில் காணலாம்.

நீர்மட்டம் 42 அடியை எட்டியது: வீராணம் ஏரியில் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது எப்போது? பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல்

Published On 2022-07-11 08:04 GMT   |   Update On 2022-07-11 08:08 GMT
  • நீர்மட்டம் 42 அடியை எட்டியது வீராணம் ஏரியில் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது எப்போது? என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
  • வீராணம் ஏரி நீர்பிடிப்பு பகுதியில் நேற்று பரவலாக மழை பெய்தது.

கடலூர்:

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் நீர்மட்டம் 47.50 அடியாகும். இந்த ஏரி மூலம் 44,856 ஏக்கர் நிலம் பாசனவசதி பெறுகிறது. அதோடு சென்னை மாநகரின் குடிநீருக்கு முக்கிய ஆதராமாக உள்ளது. இந்த ஏரிக்கு பருவகாலங்களில் பெய்யும் மழை மேட்டூர் அணை மூலம் தண்ணீர் வரத்து இருக்கும். இந்த ஆண்டு மேட்டூர் அணை முன்னதாக திறக்கப்பட்டது. எனவே காவிரி தண்ணீர் ஒரு மாதத்துக்கு பின் கடைமடை பகுதியான நாகூர்வரை சென்றது. வீராணம் ஏரிக்கு கொள்ளிடம் வழியாக கீழணைக்கு காவிரிநீர்வந்து சேரும். அங்கிருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு தண்ணீர் வரத்து இருக்கும்.

இந்த ஆண்டு திறக்கப்பட்ட காவிரிநீர் கடந்த மாதம் வீராணம் ஏரிக்கு வந்து சேர்ந்தது. இதனால் ஏரியின் நீர்மட்டம் படிபடியாக உயர்ந்தது. இன்று காலை 8 மணி நிலவரப்படி ஏரியின் நீர்மட்டம் 42 அடியாக உள்ளது. வடவாறு வழியாக 146 கனஅடிநீர் ஏரிக்கு வருகிறது. சென்னை மாநகர் குடிநீருக்காக 57 கனஅடி நீர் அனுப்பப்படுகிறது. தொடர்ந்து ஏரியின் நீர்மட்டம் அதிகரித்து வருவதால் வீராணம் ஏரி எப்போது பாசனத்துக்கு திறக்கும் என்று விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

இது குறித்து பொது பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், வீராணம் ஏரியில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது குறித்த விவசாய பிரதிநிதிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்படும். அப்போது தண்ணீர் திறப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றனர். இதனிடையே வீராணம் ஏரி நீர்பிடிப்பு பகுதியில் நேற்று பரவலாக மழை பெய்தது. இதுதவிர காட்டுமன்னார்கோவில், லால்பேட்டை, சோழத்தரம் ஆகிய பகுதிகளில் மழை பெய்தது வீராணம் ஏரி விரைவில் திறக்கப்பட உள்ளதால் விவசாயிகள் தங்களது நிலங்களை உழும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Tags:    

Similar News